இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று எச்சரித்த அந்த அணி முதல் போட்டியில் அதை செய்தும் காட்டியது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சுதாரித்த இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.
அந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் அபாரமாக விளையாடிய இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.
மோசமான தோல்வி:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தும் பென் டக்கெட் அதிரடியாக 153 (151) ரன்கள் எடுத்த உதவியுடன் ஒரு கட்டத்தில் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை 319 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட் எடுத்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 214*, கில் 91 எடுத்தனர். இறுதியில் 557 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 122 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் (434) அடிப்படையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஆசிய கண்டத்தில் முதல் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது. அதை விட இப்போட்டியின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு பதிவு செய்து இங்கிலாந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: ரோஹித்தால் ஜஸ்ட் மிஸ்ஸான உலக சாதனை.. வாசிம் அக்ரமின் 28 வருட சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்
அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 562 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓவல், 1934
2. 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – இந்தியாவுக்கு எதிராக, ராஜ்கோட், 2024*
3. 425 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, மான்செஸ்டர், 1976