இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கியமான பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.
இருப்பினும் அப்படி தடுமாற்றமாக செயல்படும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் மட்டும் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து அபாரமாக விளையாடி வருகிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே அதிரடியாக 80 (76) ரன்கள் குவித்து போராடிய அவர் இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
கங்குலி மாதிரி:
மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் விளாசி சாதனை படைத்த அவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 637 ரன்களும் 17 டி20 போட்டிகளில் 502 ரன்களும் எடுத்து தன்னை இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இடது கை பேட்ஸ்மேனான யசஸ்வி ஜெய்ஸ்வால் முன்னாள் ஜாம்பவான் வீரர் சௌரவ் கங்குலி போல ஆஃப் சைட் திசையில் அட்டகாசமாக விளையாடுவதாக இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
எனவே அடுத்த 10 வருடங்களுக்கு இதே போல விளையாடும் பட்சத்தில் தாதா கங்குலிக்கு நிகராக ஜெயஸ்வால் பேசப்படுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் நான் ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு வீரர் என்றால் அது யசஸ்வி ஜெய்ஸ்வால். தற்போது ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை நாம் பார்க்க வேண்டும்”
“அவர் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய சிறப்பான வீரர். குறிப்பாக ஆஃப் சைட் திசையில் அடிப்பதில் அவர் தாதா கங்குலியை போல் செயல்படுகிறார். கங்குலியை போலவே இவரையும் கிங் ஆஃப் தி ஆஃப் சைட் என்று நமக்கு சொல்லத் தோன்றுகிறது. அடுத்த 10 வருடங்களுக்கு இதே போல விளையாடினால் கங்குலியைப் போலவே இவரை பற்றியும் நாம் பேசுவோம்”
இதையும் படிங்க: ஃபிரண்ட்ஷிப் நம்பர் ஒன்.. இந்த பரிசு தான் எங்களோட நட்புக்கு இலக்கணம்.. தல தோனியின் நண்பர் பேட்டி
“ஜெய்ஸ்வால் அந்தளவுக்கு திறமையான வீரர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டையும் சதமும் அடித்துள்ளார்” என்று கூறினார் இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா வெற்றி பெறுவதற்கு போராட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.