வீடியோ : 18 டூ 124, பட்லருக்கு பதிலாக மும்பையை தனி ஒருவனாக சிதைத்த ஜெய்ஸ்வால் – 1000வது போட்டியில் சரவெடி சாதனை

jaiswal vs MI
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 42வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியாக அமைந்தது. அதற்கு சிறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த பிசிசிஐ மும்பை மற்றும் ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளர்களாக செயல்படும் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டியது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அப்போது பேட்டிங்கை துவங்கிய அந்த அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 (19) ரன்களில் பியூஸ் சுழலில் சிக்கினார். வரலாற்றில் தங்களுக்கு எதிராக எப்போதும் அபாரமாக செயல்பட்டு அற்புதமான புள்ளி விவரங்களைக் கொண்டுள்ள அவர் ஆரம்பத்திலேயே இப்படி தடுமாறி அவுட்டானது ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை அணியினரை நிம்மதியடைய வைத்தது. போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 (10) ரன்களில் அவுட்டாக தேவ்தூத் படிக்கலும் 3 (4) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

தனி ஒருவன் ஜெய்ஸ்வால்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் அரை சதமடித்து விரைவாக ரன்களை சேர்த்த நிலையில் அவருக்கு கை கொடுக்காமல் எதிர்ப்புறம் ஜேசன் ஹோல்டர் 11 (9) சிம்ரோன் ஹெட்மேயர் 8 (9) துருவ் ஜுரேல் 2 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் மும்பையின் தரமான பதவிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ஒரு பக்கம் தொடர்ந்து நங்கூரமாக நின்று 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சிம்ம சொப்பனமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்த சீசனில் ஏற்கனவே டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் மும்பை பவுலர்களை இப்போட்டியில் கடைசி நேரத்தில் சரமாரியாக அடித்து நொறுக்கி சதமடித்தார்.

அதன் பின்பும் ஓயாத அவர் 16 பவுண்டரி 8 சிக்சருடன் 124 (62) ரன்களை விளாசி தனி ஒருவனாக ராஜஸ்தானை செங்குத்தாக தூக்கி நிறுத்தி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது அற்புதமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 212/7 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக அர்சத் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைவிட இந்த போட்டியில் ராஜஸ்தானுக்காக 2வது அதிகபட்ச ஸ்கோராக ஜோஸ் பட்லர் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

கேப்டன் சஞ்சு சாம்சன் உட்பட இதர வீரர்களும் குறைவான ரன்களை எடுத்து ஆரம்பம் முதலே ரன் ரேட் சரியும் வகையில் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனால் தன்னுடைய அதிரடியான திறமையால் மும்பை பவுலர்களை தனி ஒருவனாக அடித்து நொறுக்கி ஜெயஸ்வால் சதமடித்து காப்பாற்றியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 124 ரன்கள் அவர் மட்டும் தனி ஒருவனாக எடுத்த நிலையில் இதர ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதுவே இந்த போட்டியில் அவர் எந்தளவுக்கு விளையாடினார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே இதே போல சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: SRH vs DC : என்னோட ஸ்பெஷலே இதுதான். டெல்லி அணியை பந்தாடிய கிளாசன் – அதிரடி பேட்டி

அதை விட 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது பெங்களூருவுக்கு எதிராக நடந்த வரலாற்றின் முதல் போட்டியில் கொல்கத்தாவுக்கு பிரெண்டன் மெக்கலம் சதமடித்து 158* ரன்கள் விளாசி வரலாற்றில் தனது பெயரை ஆழமாக பதித்தது யாராலும் மறக்க முடியாது. அதே போல 1000வது போட்டியில் சதமடித்த வீரராக சாதனை படைத்துள்ள ஜெய்ஸ்வால் தன்னுடைய பெயரையும் ஆழமாக பதித்துள்ளார்.

Advertisement