கொடுத்த வாக்கை காப்பாற்றி தனது அம்மாவின் மனதை குளிர்வித்த ஜெய்ஸ்வால் – வெளியான நெகிழ்ச்சி பின்னணி

yashasvi Jaiswal Family
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் டாமினிக்கா நகரில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த வெற்றிக்கு அறிமுக போட்டியில் களமிறங்கி 171 ரன்கள் குவித்து சௌரவ் கங்குலி, முகமது அசாருதீன் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்து முக்கிய பங்காற்றிய யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மும்பையை சேர்ந்த அவர் பானி பூரி விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் கிரிக்கெட்டின் மீதான காதலால் தடைகளை உடைத்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே, ரஞ்சி என 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் சதங்களை அடித்து கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

தாய் மனதை குளிர்வித்த மகன்:
அதன் உச்சகட்டமாக ஐபிஎல் 2023 தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற 2 ஆல் டைம் சாதனைகளை படைத்த காரணத்தால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் தற்போது அதிலும் அசத்த தொடங்கியுள்ளார். முன்னதாக ஆரம்ப காலங்களில் மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும் குடிசைகளில் வாழ்ந்து வந்த ஜெயஸ்வால் தற்போது தன்னுடைய திறமையால் அடிமட்டத்திலிருந்து சாதித்து முன்னேற்றத்தை கண்டு வருவதால் அதற்கேற்ற ஊதியத்தையும் பெற்று வருகிறார்.

அதன் பயனாக முதலில் தம்முடைய அம்மா மற்றும் குடும்பத்தை பெரிய வீட்டில் குடி பெற வைத்து அழகு பார்க்க விரும்பிய ஜெய்ஸ்வால் அதற்கான பணத்தை வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. குறிப்பாக தாம் நாடு திரும்புவதற்குள் புதிய வீட்டை வாங்கி அதில் அம்மா மற்றும் அப்பாவை அமர செய்யுமாறு தம்மிடம் தெரிவித்து விட்டு யசஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வருவதாக அவருடைய சகோதரர் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் தற்போது மும்பையில் இருக்கும் தானே நகரில் 5 பெட்ரூம்கள் அடங்கிய பெரிய வீட்டை வாங்கியுள்ள தேஜஸ்வி அதில் தங்களுடைய குடும்ப பொருள்கள் அனைத்தையும் மாற்றி அம்மா, அப்பாவை அமர வைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி எப்போதும் சீக்கிரம் வீட்டை மாற்றுங்கள். நாம் இந்த வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியின் இடையில் கூட அவர் வீடு மாற்றுவதைப் பற்றி அடிக்கடி போனில் பேசினார்”

“அந்த வகையில் தம்முடைய வாழ்நாளில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே ஆசையாகும். ஏனெனில் மும்பையில் மழை பெய்த இடங்களில் தங்கியிருந்த அவருக்கு தலைக்கு மேல் தரமான கூரை இருப்பதன் அவசியமும் முக்கியமும் நன்றாக தெரியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:நம்ப வைத்து ஏமாற்றிய ஆர்.சி.பி அணியின் நிர்வாகம். வெளிப்படையாக வருத்தத்தை பகிர்ந்த – யுஸ்வேந்திர சாஹல்

அப்படி கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து தம்முடைய மகன் வாங்கிய வீட்டில் தற்போது ஜெய்ஸ்வால் அவர்களுடைய அம்மா அமர்ந்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தாய் மனதை குளிர்வித்துள்ள ஜெய்ஸ்வால் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்திய அன்னையின் மனதையும் வருங்காலங்களில் உலக கோப்பையை வென்று குளிர்விக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement