IND vs WI : முதல் போட்டியிலேயே அடிச்ச சதத்த அவங்களுக்கு டெடிகேட் பண்றேன் – கண் கலங்கிய ஜெய்ஸ்வால் உணர்ச்சியுடன் பேசியது என்ன

Jaiswal 147
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக அறிமுக போட்டியில் களமிறங்கி சவாலை கொடுத்த இளம் வீரர் அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்திய சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் புதிய ஓப்பனிங் ஜோடியாக விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் சந்தித்த முதல் பந்திலேயே அட்டகாசமான பவுண்டரியை பறக்க விட்டு தமது கேரியரை மிகச் சிறப்பாக தொடங்கினார். அந்த வகையில் ஆரம்பம் முதலே நிதானமாக பேட்டிங் செய்த இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் சீரான ரன் குவிப்பால் ஈடுபட்டு முதல் நாளிலேயே 80 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி:
அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது நாளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியில் கொஞ்சமும் தடுமாறாமல் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் 17வது இந்திய வீரர் 3வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அவருடன் மறுபுறம் அசத்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய அனுபவத்தை காட்டி 229 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 103 ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்து வந்த சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து வந்த விராட் கோலி தம்முடைய அனுபவத்தை காட்டி 36* ரன்கள் எடுக்க ஜெய்ஸ்வால் 143* ரன்கள் எடுத்த போது நிறைவு பெற்ற 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 312/2 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸை விட 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக பானிபூரி விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாகவே அசத்தலாக செயல்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற ஆல் டைம் சாதனை படைத்து 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சரித்திரமும் படைத்தார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் உள்ளூர் ரஞ்சிக்கோப்பையிலும் 82 என்ற சிறப்பான சராசரியில் ரன்களை குவித்த காரணத்தால் இந்த வாய்ப்பை பெற்ற அவர் அறிமுக போட்டியிலேயே சதமடித்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த வாய்ப்பை தமக்கு கொடுத்த இந்திய அணிக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவித்த ஜெய்ஸ்வால் இந்த சதத்தை தன்னுடைய பெற்றோர்களுக்கு சமர்ப்பிப்பதாக கலங்கிய கண்களுடன் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

“இந்த சதம் எனக்கு மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணியில் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாகும். அதை கொடுத்த என்னுடைய ஆதரவாளர்களுக்கும் ரோஹித் பாய் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்”

இதையும் படிங்க: IND vs WI : சேவாக் – வாசிம் ஜாபர் ஜோடியின் சாதனையை 21 ஆண்டுகள் கழித்து காலிசெய்த ரோஹித் – ஜெய்ஸ்வால் கூட்டணி

“இந்த பெரிய பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சதத்தை என்னுடைய அம்மா மற்றும் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இதில் நிறைய பங்காற்றியுள்ளனர். அதேபோல கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சமயத்தில் இதை தவிர்த்து சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. என்னுடைய பயணத்தை துவங்கியுள்ள நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement