ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் விரைவில் துவங்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா தோனி தலைமையில் வென்றது. ஆனால் அதன் பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
எனவே இம்முறையாவது அந்த சோகமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா இரண்டாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றதை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக கடைசி நேரத்தில் மிஸ்பா-உல்-ஹக் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 43 (38) ரன்கள் குவித்து அதிரடியாக போராடினார்.
சரியான முடிவு:
அதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனுபவமிக்க ஹர்பஜன் சிங்கை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி அனுபவமில்லாத ஜோஹிந்தர் சர்மாவிடம் பந்தை கொடுத்தார். அந்த ஓவரிலும் ஆரம்பத்திலேயே 2 சிக்சர்களை அடித்த மிஸ்பா இந்தியாவின் தோல்வியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.
ஆனால் 3வது பந்தில் அவர் தேவையின்றி அடித்த ஸ்கூப் ஷாட் ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சாக மாறியதால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது. இந்நிலையில் அப்போட்டியில் கடைசி ஓவரில் ஸ்பின்னருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சளாரை பயன்படுத்திய தோனியின் முடிவு மிகவும் சரியானது என்று மிஸ்பா-உல்-ஹக் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“கடைசி ஓவரை யார் வீசுவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது கண்டிப்பாக ஸ்பின்னாக இருக்காது என்பது தெரியும். அப்போது இந்தியாவிடம் ஜோகிந்தர் சர்மா மட்டுமே இருந்தார். மைதானத்தின் பவுண்டரி அளவு சிறியதாக இருந்தால் அதை ஸ்பின்னர் வீச முடியாது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை ஸ்பின்னர் வீசியிருந்தால் நான் எளிதாக பவுண்டரி அடித்திருப்பேன்”
இதையும் படிங்க: டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த சூரியகுமார் யாதவ் – மேலும் ஒரு வீரரும் அசத்தல்
“எனவே அந்த ஐடியா எனக்கு முன்னதாகவே இருந்தது. எம்எஸ் தோனியும் அந்த முடிவை சரியாக எடுத்தார் என்று நினைக்கிறேன். குறிப்பாக மித வேகப்பந்து வீச்சாளரை வைத்து வெற்றி பெற குறைவான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்பது தோனிக்கு தெரியும். ஏனெனில் அது கடைசி விக்கெட் என்பதால் கடைசி ரன்னில் கூட வாய்ப்பு இருந்தது. அதனால் நீங்கள் அவுட்டானால் போட்டி முடிந்து விடும். எனவே யார் அந்த கடைசி ஓவரை வீசுவார் என்பதை தெரிந்து நானும் மனதளவில் தயாராக இருந்தேன்” என்று கூறினார்.



