வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாமினிக்கா நகரில் ஜூலை 12ஆம் தேதி துவங்கிய 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா 3வது நாள் முடிவில் 162 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை ஆரம்பத்திலேயே பிரகாசப்படுத்தியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை துவக்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
அசத்தும் ஜெய்ஸ்வால்:
நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியில் இருவருமே சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் (229) ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக வரலாறு படைத்த போது கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த சுப்மன் கில் 6 ரன்னில் அவுட்டாகி சென்றாலும் 2வது நாள் ஆட்டநேர முடிவில் 312/2 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 36* ரன்கள் எடுத்துள்ளார்.
அவருடன் மறுபுறம் தொடர்ந்து அசத்தி வரும் ஜெய்ஸ்வால் 143* ரன்களுடன் இருப்பதால் இன்று நடைபெறும் போட்டியில் இரட்டை சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை விட ஏற்கனவே அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 17வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் இதுவரை 350* பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
1. இதன் வாயிலாக 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக இன்னிங்ஸிலேயே அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை தகர்த்து ஜெயஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1984ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முகமது அசாருதீன் 322 பந்துகளை எதிர்கொண்டு 110 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
அதே போல 1996இல் சௌரவ் கங்குலி இங்கிலாந்துக்கு எதிராக மற்றும் 2013இல் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய அறிமுக இன்னிங்ஸில் தலா 301 பந்துகளை எதிர்கொண்டு அடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
2. அதுபோக இதுவரை 147* ரன்கள் குவித்துள்ள ஜெயஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலியின் 26 வருட சாதனையை உடைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய கங்குலி 131 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டுக்கு நீங்க லாய்க்கி இல்ல – சேவாக்கை ஸ்லெட்ஜ் செய்து அவுட்டாக்கிய 2005 பின்னணியை பகிர்ந்த முன்னாள் பாக் வீரர்
மேலும் பானி பூரி விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ஜெய்ஸ்வால் ரஞ்சிக் கோப்பையில் 82 என்ற சராசரியில் ரன்களை குவித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் 2023 தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனை படைத்த அவர் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஆல் டைம் வரலாற்றையும் படைத்து தற்போது இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அசத்துவது குறிப்பிடத்தக்கது.