
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதியான இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக துவங்கிய வேளையில் 58 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டாக கே.எல் ராகுல் 54 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 145 பந்துகளில் சதம் அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
சதம் அடித்ததோடு மட்டுமின்றி தற்போது பெரிய ரன் குவிப்பை நோக்கி அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் சாதனையை பின்னுக்கு தள்ளி தற்போது மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 23 வயதிற்குள் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ஜெய்ஸ்வால் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 71 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் ஒட்டுமொத்தமாக 8 சதங்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் 23 வயதுக்குள் அதிக சதங்களை அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : பும்ராவை பாத்து தான் நான் அந்த திறமையை கத்துகிட்டேன் – அர்ஷ்தீப் சிங் வெளிப்படை
அவருக்கு அடுத்து விராட் கோலி 15 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் தற்போது 8 சதங்களுடன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது ஆகிய இடங்களில் ரவி சாஸ்திரி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.