இவரு மட்டும் 20 ரன் அடிச்சா போதும்.. இந்தியா தோத்ததே கிடையாது.. – வியக்க வைக்கும் இளம்வீரரின் கைராசி

Jaiswal
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறவிருக்கும் கடைசி டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலி நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் இடம் பிடித்துள்ளதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் ரோஹித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உறுதி செய்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் மட்டும் பவர்பிளே ஓவர்களில் 20 ரன்கள் குவித்து விட்டால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்கிற ஒரு சுவாரசியமான புள்ளி விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் பொதுவாக முதல் 6 ஓவர்கள் பவர்பிளே என்பதனால் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும்.

இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரிகளை அடிக்கலாம். அதேசமயம் முதல் சில ஓவர்களில் கூடுதல் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இருக்கும் என்பதனால் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழப்பதற்கும் அது ஏதுவாக அமையலாம். இந்நிலையில் இப்படி டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி விளையாடும் வீரராக யாஷஸ்வி ஜெயஸ்வால் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக 14 போட்டிகளில் அவர் துவக்க வீரராக களமிறங்கியுள்ள வேளையில் 292 ரன்கள் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.69 ஆக இருக்கிறது. வேறு எந்த ஒரு இந்திய வீரருக்கும் இல்லாத அளவு அதிக ஸ்ட்ரைக் ரேட்டை இவர் துவக்க ஓவர்களில் வைத்துள்ளார். இதன் காரணமாக அவரால் போட்டியின் ஆரம்பத்திலேயே அடித்து விளையாட முடிகிறது. இதுவரை 14 இன்னிங்சில் அவர் 8 முறை பவர்பிளேவில் 20 ரன்கள் கடந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் கோலியின் இடத்தில் களமிறங்கப்போவது யார்? – விவரம் இதோ

அப்படி 8 முறை அவர் 20 ரன்களை கடந்த போதெல்லாம் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 50 ரன்கள் கடந்து இருக்கிறது. அதேபோன்று இப்படி 50 ரன்களை கடந்த அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் அவர் பவர்பிளே ஓவர்களுக்குள் 20 ரன்களை குவித்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று அந்த புள்ளி விவரம் கூறுகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம் என்பதனாலும் தனது விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அடித்து ஆடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான துவக்கத்தை அளிப்பதனாலும் அவரே டி20 உலக கோப்பையில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement