ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 19.2 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்விக்கு காரணமானது.
அதிகபட்சமாக ஷாம் கரன் 88, தேவால்ட் ப்ரேவிஸ் 32 ரன்கள் அடித்தார்கள். அதிகபட்சமாக சஹால் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 191 ரன்களை துரத்திய பஞ்சாப் அணியை பிரப்சிம்ரன் சிங் 54, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்து 19.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் பஞ்சாப் 6வது வெற்றியைப் பெற்ற நிலையில் சென்னை 8வது தோல்வியை சந்தித்தது.
ஹாட்ரிக் ஹீரோ:
இதையும் சேர்த்து 2020, 2022, 2024, 2025 ஆகிய 4 வருடங்களில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் சென்னை வெளியேறியது. அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அடுத்தடுத்த தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் சஹால் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகள் எடுத்தது சென்னை அணியின் தோல்விக்கு வித்திட்டது.
19வது ஓவரில் ஓவரில் அவருக்கு எதிராக சிக்ஸர் அடித்த தோனி அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 4, 5, 6வது பந்துகளில் ஹூடா, கம்போஜ், நூர் அஹ்மத் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்த சஹால் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற யுவ்ராஜ் சிங் சாதனையை சமன் செய்தார். இந்நிலையில் இந்தப் போட்டியில் தோனி தம்மை அடித்து நொறுக்கியிருக்கக்கூடும் என்று சஹால் தெரிவித்துள்ளார்.
மீம் கொண்டாட்டம்:
இருப்பினும் தைரியத்தின் உதவியுடன் ஹாட்ரிக் எடுத்த திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நன்றாக உணர்கிறேன். 19வது ஓவரில் மஹி பாய் இருந்ததால் ஒன்று அது அடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இப்படியும் விக்கெட்டுகளாக கிடைத்திருக்கலாம். ஆனால் நான் விக்கெட்டுகள் எடுப்பதை பற்றி நினைத்தேன்”
இதையும் படிங்க: அவர் ஃபைட்டர் இவர் எனர்ஜி ஹிட்டர்.. தோத்தாலும் வருங்கால சிஎஸ்கே சொத்தா இருப்பாரு.. தோனி பேட்டி
“நிர்ணயிக்கப்பட்ட ஓவருக்குள் பந்து வீசி முடிக்காததால் உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் செட்டிலாகக் கூடாது என்று நினைத்தேன். பேட்ஸ்மேன்கள் மனதுடன் விளையாட முயற்சித்தேன். அந்த வித்தியாசமான கொண்டாட்டம் மீம் வாயிலாக வந்தது. எனவே 5 விக்கெட் அல்லது ஹாட்ரிக் எடுத்தால் அப்படி கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன்” எனக் கூறினார்.



