வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை விட 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பெற்றுக் கொடுக்காத ரோஹித் சர்மா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனலிலும் அஸ்வினை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்து தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
அதனால் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதை போலவே 2025இல் நடைபெறும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இளம் அணியை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் எதுவுமே மாறாமல் மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படாமல் துணை கேப்டனாக ரகானேவை அறிவித்துள்ள பிசிசிஐ முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி செல்லும் முடிவை எடுத்துள்ளது.
அவங்க உசத்தியா:
அதுமட்டுமின்றி ஃபைனலில் தோல்வியை சந்திக்க கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சுமாராக செயல்பட்டு காரணமாக அமைந்த நிலையில் அதன் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. ஆனால் உண்மையாகவே கடந்த 2019க்குப்பின் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரகானே ஆகிய 3 பேருமே ஒரு சதம் மட்டுமே அடித்து 35க்கும் குறைவான பேட்டிங் சராசரியில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இல்லாத புஜாராவை மட்டும் பலிகிடாவாக தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சமமாக புஜாராவை நடத்தியிருக்க வேண்டும் என முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் விமர்சித்துள்ளார். குறிப்பாக இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றிய புஜாராவை இப்படி கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு விராட் கோலி, ரோஹித் சர்மாவை மட்டும் உயர்வாக மதித்து சர்பராஸ் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் ராமன் இது பற்றி ஆகாஷ் சோப்ரா யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“சர்பராஸ் கான் தேர்ந்தெடுக்காதது பற்றி தேர்வுக்குழு மீது நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன. அதில் குறிப்பாக ஃபிட்னஸ் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் முன்னேற வேண்டும் என்று கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் அவர்கள் சர்பராஸ் கான் மீது உண்மையாக எந்த தடுமாற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த அணியில் பிரச்சனை என்னவெனில் அவர்கள் 4 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்து புஜாராவை நீக்கியுள்ளார்கள் என்பது மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயமாகும். ஏனெனில் புஜாரா போன்ற ஒருவர் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவுக்கு நிறைய பங்காற்றியுள்ளார்”
“குறிப்பாக மிகவும் கடினமாக போராடும் தன்மை கொண்ட அவரிடம் சமீபத்தில் துணை கேப்டன்ஷிப் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் ஃபைனலில் சொதப்பியதற்காக அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு பலருக்கும் திருப்தியளிக்காததை போலவே எனக்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்திய அணியில் அவர் இன்னும் சிறப்பாக மதிக்கப்படுவதற்கு தகுதியுடையவர். ஒருவேளை இது புஜாராவின் கேரியர் முடிவு என்று தேர்வுக்குழு கருதினால் அது சிறப்பாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:ஒரு பந்தை அடிக்க விராட் கோலி 7 டிப்ஸ் கொடுத்தாரு – 2022 டி20 உ.கோ பாக் போட்டியின் ஸ்வாரஸ்ய பின்னணியை பகிர்ந்த அஸ்வின்
அதாவது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு சமமாக நடத்தாமல் இப்படி முன்னறிவிப்பின்றி மீண்டும் மீண்டும் புஜாரா நீக்கப்படுவது ஏமாற்றத்தை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் துலீப் கோப்பையில் விளையாடும் புஜாரா மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்கு போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.