சோளியை முடிக்க அவர் வராரு, உங்களிடம் பும்ராவும் இல்ல – டி20 உ.கோ’யில் பாகிஸ்தான் வெல்லும் – முன்னாள் பாக் வீரர் உறுதி

IND vs PAk Rahul Hardik Pandya
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று டி20 சாம்பியனாக முடி சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக கருதாமல் கௌரவமாக பார்ப்பதுடன் எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதி வருகின்றன.

அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு மவுசு முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் 1992 முதல் பங்கேற்ற அத்தனை கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்ட இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அதே துபாயில் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவை மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து பைனலுக்கு செல்லவிடாமல் பாகிஸ்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அதனால் இம்முறை அதற்கு இந்தியா பழிவாங்குமா அல்லது பாகிஸ்தான் மீண்டும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பும்ராவும் இல்ல:
முன்னதாக கடந்த வருடம் உலகல்கோப்பையில் தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த சாஹீன் அப்ரிடி சமீபத்திய ஆசிய கோப்பையில் காயத்தால் விலகினாலும் அதிலிருந்து குணமடைந்து உலக கோப்பையில் பங்கேற்க தயாராகி வருகிறார். மறுபுறம் முதன்மைப் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் பங்கேற்காத நிலையில் உலக கோப்பையிலும் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து விளையாடும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி ஷாஹீன் அப்ரிடி வந்துள்ளதும் பும்ரா வெளியேறியதும் இம்முறை பாகிஸ்தானுக்கு மீண்டும் வெற்றியை கொடுக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் அசார் முகமது வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக இருக்கிறது ஆனாலும் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. மறுபுறம் இந்தியா ஆரம்பத்திலேயே பும்ராவை இழந்து பெரிய இழப்பை சந்தித்துள்ளது. ஆனால் ஷாஹீன் அப்ரிடி குணமடைந்து விளையாடினால் எங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணி மிரட்டலாக இருக்கும்”

- Advertisement -

“இருப்பினும் துபாயில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் பிட்ச்கள் சற்று வித்யாசமாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் பந்து சிறப்பாக பேட்டுக்கு வரும். எனவே இம்முறை நல்ல போட்டியாக அமையப்போகும் இப்போட்டியில் சமீப காலங்களில் மனதளவில் பலத்துடன் செயல்பட்டதை போலவே இம்முறையும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வெல்லும் என்று நம்புகிறேன். ஷாஹீன் அப்ரிடி அணிக்குத் திரும்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் மீண்டும் பயிற்சிகளை துவங்கியுள்ளார்”

“அந்த பயிற்சிகளை அவர் சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு எந்த தடையும் ஏற்படாது. அதனால் அவர் கடந்த உலகக் கோப்பையை போலவே இம்முறையும் பந்து வீசுவார் என்று நம்புகிறேன். மேலும் இந்தியாவை தோற்கடிக்க அவர் தேவை என்பதால் இந்த உலகக் கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்று நான் உட்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன். போட்டியில் இருக்கும் 2 நபர் – யாருக்கு வாய்ப்பு?

அதாவது சமீபத்திய ஆசிய கோப்பையில் மைதானங்கள் சற்று மாறுபட்டதாக இருந்ததாக தெரிவிக்கும் அவர் ஆஸ்திரேலியாவில் அவ்வாறு அல்லாமல் பேட்டிங்க்கு சமமாக பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் தங்களுடைய பந்துவீச்சு கூட்டணி இந்தியாவை திணறடிக்கும் என்று கூறியுள்ளார். அதிலும் பும்ரா விலகியுள்ள நிலையில் ஷாஹீன் அப்ரிடி திரும்புவதால் கடந்த உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போலவே இந்த உலக கோப்பையிலும் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Advertisement