எங்களுக்கு காசு வேண்டாம், அந்த உதவி மட்டும் பண்ணுங்க – சச்சினுக்கு முன்னாள் வெ.இ வீரர் வைத்த கோரிக்கை

Sachin-2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 – 1* என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் பின்தங்கியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரிலும் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணியிடம் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. 1970 போன்ற காலகட்டத்தில் விவ் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் என ஜாம்பவான்களுக்கெல்லாம் ஜாம்பவான்களாக போற்றப்படும் பேட்ஸ்மேன்களையும் பவுலர்களையும் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் தனது அதிரடியான கிரிக்கெட்டால் உலகின் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடி 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று அசுரனாக வலம் வந்தது.

இருப்பினும் பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்கள் ஓய்வுக்குப் பின் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திணறும் வெஸ்ட் இண்டீஸ் 21-ஆம் நூற்றாண்டில் கத்துக்குட்டி அணியாக மாறிப்போனது. நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப வளர்ச்சி அடைவதற்கான அடிப்படை வசதிகள் அங்கு சரிவர கிடைப்பதில்லை என்பதே அதற்கு காரணமாகும். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பொருளாதார அளவில் சமீப காலங்களில் பெரிய பிரச்சனைகளை சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அதன் காரணமாக உள்ளூர் கிரிக்கெட்டில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிவதில்லை.

- Advertisement -

ஏழ்மையான விண்டிஸ்:
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் தங்களது வீரர்களுக்கு தேவையான சம்பளத்தை கூட கொடுக்க முடியாத அளவுக்கு அந்நாட்டு வாரியம் பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட ஒப்பந்தப்படி சம்பளம் வழங்காத காரணத்தால் கெயில், பொல்லார்ட் போன்றவர்கள் அந்த அணிக்காக விளையாட முடியாது என்று அறிவித்தனர். அதனாலேயே அவர்கள் வெஸ்ட் இண்டீசுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட முன்னுரிமையும் கொடுக்கின்றனர்.

அந்தளவுக்கு பொருளாதாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் பின்தங்கியுள்ளதால் தேவையான வசதிகளின்றி திறம்பட பயிற்சிகளை மேற்கொண்டு தரமான வீரர்களை உருவாக்குவதில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இப்படி அடிப்படையில் நிறைய பிரச்சினைகள் நிலவுவதே வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக காட்சியளிக்க காரணமாகிறது.

- Advertisement -

சச்சினுக்கு வேண்டுகோள்:
இந்நிலையில் தங்களது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தரமான இளம் வீரர்களை உருவாக்குவதற்கு பணம் கேட்கவில்லை மாறாக கிரிக்கெட் பேட் போன்ற உபகரணங்களை நீங்களே வாங்கி கொடுங்கள் என்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் நெஞ்சை உருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்காக 1986 – 1995 வரை 21 டெஸ்ட் மற்றும் 85 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 161 விக்கெட்டுகளை எடுத்த அவர் தற்போது உள்ளூர் அளவில் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலைமையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் டி20 தொடரில் செய்தியாளராக செயல்பட்டு வரும் இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் அவர்களின் யூடியூப் சேனல் வாயிலாக அவர் வைத்த இந்த கோரிக்கையில் பேசியது பின்வருமாறு. “முந்தைய காலங்களில் ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் தொடரால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பயனடையும் சூழல் இருந்தது. அந்த வகையில் நான் தற்போது எந்த பயனையும் கேட்கவில்லை. மாறாக யாரேனும் ஒருவர் “இதோ இந்த கிரிக்கெட் உபகரணங்களை உதவியாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவதையே விரும்புகிறேன். 10 – 15 பேட்டுகள் எனக்குப் போதுமானது”

- Advertisement -

“எனக்கு 20000 அமெரிக்க டாலர்கள் வேண்டாம். எனக்கு சில கிரிக்கெட் உபகரணங்கள் இருந்தால் போதும். அதை நான் இளம் வீரர்களுக்கு வழங்குவேன். அதை மட்டும் தான் இங்கு நான் கேட்கிறேன். மிஸ்டர் டெண்டுல்கர் உங்களால் முடிந்தால் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் எனக்கு உதவ முடியுமா?” என்று கூறினார். இதுபோக ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் சமீபத்தில் இதுபோன்ற உதவி செய்ததை மறக்காமல் இந்த வீடியோவில் நன்றி தெரிவித்து பேசிய அவர் இதுபோல் உதவி செய்ய யார் வந்தாலும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய நல்ல நண்பர் முகமது அசாருதீனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர் ஏற்கனவே சில உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளார். உங்களின் உதவிக்கு வாழ்த்துக்கள் அசார், என்னுடன் தொடர்பில் இருங்கள். வேறு யாரேனும் உதவி செய்ய விரும்பினால் தயக்கமின்றி செய்யுங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மாபெரும் சாதனையை படைக்கப்போகும் ரோஹித் சர்மா – என்னனு பாருங்க

இப்படி பணம் வேண்டாம் உபகரணங்களை கொடுங்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வைத்துள்ள இந்த வேண்டுகோள் இந்திய ரசிகர்களின் நெஞ்சை தொட்டுள்ளது. மேலும் அவரின் கோரிக்கையை ஏற்று சச்சின் டெண்டுல்கர் இந்த உதவியை செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement