IND vs WI : மீண்டும் மாயாஜாலம் நிகழ்த்திய குல்தீப், வேலையை காட்டிய ஹெட்மயர் – கடினமான பிட்ச்சில் சவாலான இலக்கை இந்தியா துரத்துமா

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் விளையாடும் இந்தியா இத்தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அந்த நிலையில் அமெரிக்காவுக்கு நகர்ந்துள்ள இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் 4வது போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஃப்ளோரிடாவில் இருக்கும் லாடர்ஹில் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு அதிரடி காட்டிய கெய்ல் மேயர்ஸை 17 (7) ரன்களில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சற்று தடுமாறிய பிரண்டன் கிங்கை 18 (16) ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அதனால் 54/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு பவர் பிளே முடிந்ததும் முதல் ஓவரை வீசிய குல்தீப் தன்னுடைய முதல் பந்திலேயே முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய நிக்கோலஸ் பூரானை 1 (3) ரன்னில் அவுட்டாக்கி அடுத்த சில பந்துகளிலேயே அடுத்ததாக வந்த கேப்டன் ரோவ்மன் போவலையும் 1 (3) ரன்னில் காலி செய்து மாயாஜாலம் நிகழ்த்தினார்.

அதன் காரணமாக மேலும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்க்கு மறுபுறம் நிலைத்து நின்ற மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் சாய் ஹோப் அடுத்ததாக வந்த ஹெட்மயருடன் இணைந்து அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 45 (29) ரன்கள் எடுத்த போது சஹால் சுழலில் வீழ்ந்தார். அடுத்த சில ஓவரிலேயே அடுத்ததாக வந்த ரொமாரியா செஃபார்ட் 9 (6) ரன்களில் அக்சர் படேல் சுழலில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜேசன் ஹோல்டர் முகேஷ் குமார் வேகத்தில் 3 (4) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அதனால் 123/7 என சரிந்த வெஸ்ட் இண்டீஸை மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட ஹெட்மயர் அரை சதமடித்து 150 ரன்கள் தாண்ட உதவினார். அதே வேகத்தில் டெத் ஓவர்களில் சற்று நேரடியாக விளையாடிய அவர் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 61 (39) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஓடின் ஸ்மித் 15* (12) ரன்களும் அகில் ஹொசன் 5* (20) ரன்களும் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

முன்னதாக இந்த போட்டி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற 14 சர்வதேச டி20 போட்டிகளில் 2 முறை மட்டுமே சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. அந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 180 ரன்களுக்குள் மடக்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

இதையும் படிங்க:IND vs WI : அமெரிக்காவில் ஆரம்பத்திலேயே வெற்றி பறிபோனதா? 4வது டி20யில் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு – காரணம் இதோ

எனவே சாதாரணமாக பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் எட்டக்கூடிய இந்த இலக்கை தொடுவதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறாமல் செயல்பட்டால் வெற்றி எளிதாக கிடைத்து விடும் என்று சொல்லலாம். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அரை மணி நேரம் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினாலே வெற்றி தாமாக வரும். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பிட்ச் மேலும் பவுலர்களுக்கு கை கொடுக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.

Advertisement