வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியிலும் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வரும் அந்த போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் வரலாற்றில் 100வது போட்டியாக அமைந்ததை நினைவு கூறும் வகையில் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சிறப்பு பரிசை வழங்கினார். தற்போது பலவீனமாக இருந்தாலும் 1930 முதல் 2010 வரை இந்தியா மட்டுமின்றி உலகையே மிரட்டும் அணியாகவே வெஸ்ட் இண்டீஸ் இருந்தது.
அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆண்டிகுவாவில் நடைபெற்ற போட்டியை மறக்க முடியாது என்றே சொல்லலாம். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக உலகின் மகத்தான ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா செயல்பட்ட நிலையில் இந்திய அணியில் அப்போது தான் நீளமான முடிகளுடன் ரசிகர்களை கவரும் வகையில் விக்கெட் கீப்பராக எம் எஸ் தோனி அறிமுகமாகியிருந்தார். அந்த சூழலில் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 241 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 371 ரன்கள் பதிலுக்கு எடுத்தது.
வெளியேற சொன்ன லாரா:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வாசிம் ஜாபர் அபாரமான இரட்டை சதமடித்து 212 ரன்கள் எடுத்த உதவியுடன் வீரந்தர சேவாக் 41, லக்ஷ்மன் 31, கேப்டன் ராகுல் டிராவிட் 62, யுவராஜ் சிங் 39, முகமது கைஃப் 36* என முக்கிய வீரர்கள் அனைவரும் நல்ல ரன்களை எடுத்தனர். அதனால் 400 ரன்களை கடந்த இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய எம்எஸ் தோனி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட முயற்சித்தார்.
குறிப்பாக கேப்டன் ராகுல் டிராவிட் விரைவில் டிக்ளேர் செய்யப்போகிறோம் அதிரடியாக விளையாடுங்கள் என்று சொல்லி அனுப்பியதால் 151வது ஓவரை வீசிய ஸ்பின்னர் தேவ் முகமதுக்கு கருணை காட்டாத அவர் 2, 3, 4 ஆகிய அடுத்தடுத்த பந்துகளில் முரட்டுத்தனமான சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி 5வது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிங்கிளுடன் 50 ரன்களை கடந்தார். அத்தோடு நிற்காத அவர் மீண்டும் அதே ஸ்பின்னர் வீசிய அடுத்த ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட்களால் அடுத்தடுத்த சிக்சர்களை தெறிக்க விட்டு வர்ணையாளர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அப்போதும் நிற்காத தோனி 4வது பந்தில் மீண்டும் லெக் சைட் கருணை காட்டாமல் முரட்டுத்தனமான சிக்சரை தெறிக்க விட்டார். அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போன பிரைன் லாரா வாய் மீது கை வைத்து நின்றார். அதைத்தொடர்ந்தும் நிற்காத தோனி அடுத்த பந்திலும் சிக்சர் அடிக்க முயற்சித்த போது பவுண்டரி எல்லையில் இருந்த டேரன் கங்கா கேட்ச் பிடித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் ஃபீல்டரின் கால் பவுண்டரி எல்லையில் பட்டதால் அதை 3வது நடுவர் சோதித்தனர்.
ஆனால் அந்த காலத்தில் தெளிவான டெக்னாலஜி இல்லாததால் நடுவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறிய நிலையில் தோனியிடம் அருகே சென்ற பிரையன் லாரா “அடித்தது போதும் வெளியே செல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் அவுட்டாகாமல் எப்படி செல்ல முடியும் என்று தோனி இருந்த போது மைதானத்தில் ஏற்பட்ட அனைத்து பரபரப்புக்கும் ஒரே முடிவாக ராகுல் டிராவிட் 521/6 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் அந்த சமயத்தில் பிரைன் லாரா பேசியதைப் பற்றி தோனி தெரிவித்தது பின்வருமாறு.
இதையும் படிங்க:IND vs WI : 90 வருட டெஸ்ட் வரலாற்றில் புதிய சரித்திர சாதனையை நிகழ்த்தி அதிரடி காட்டிய – ரோஹித்-ஜெய்ஸ்வால் ஜோடி
“என்னிடம் வந்த பிரைன் “என்னுடைய வீரர்களுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதால் நீங்கள் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது நீங்கள் அவுட் என்று என்னுடைய வீரர்கள் என்னிடம் உண்மையைச் சொல்கிறார்கள்” என கூறினார். அதனால் நான் வெளியேற முடிவெடுத்தேன். இருப்பினும் டேரன் கங்கா பவுண்டரி எல்லை தமக்கு பின்னால் இருந்ததால் அவுட் பற்றி உறுதியாக சொல்ல முடியாது என கூறினார்” என்று தெரிவித்திருந்தார்.