அவுட்டாக்க வேண்டாம், ஆளை காலி செய்தால் போதும் – 1999இல் கங்குலியை சாய்க்க பாக் போட்ட திட்டம்

IND vs Pak
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள். அந்தளவுக்கு அனல் பறக்கும் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் சமீப காலங்களில் எல்லை பிரச்சனை காரணமாக ஆசிய கோப்பை அல்லது உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

pakisthan IND vs PAK

- Advertisement -

மேலும் சமீப காலங்களில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் போட்டிகளை விட 1990 மற்றும் 2010 வரையிலான காலகட்டத்தில் மோதிய போட்டிகளே மிகவும் பரபரப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்று கூறலாம். ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், ஷோயப் அக்தர், இன்சமாம்-உல்-ஹக், சாகித் அப்ரிடி என தரத்திலும் தரமான வீரர்கள் தங்களது அணியை வெற்றி பெற வைப்பதற்காக நேருக்கு நேர் மோதிய தருணங்களை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அப்படி இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் போது இந்தியாவை சாய்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எந்த எல்லையையும் தாண்டுவதற்கு தயங்கியதே கிடையாது.

கங்குலி மீது தாக்குதல்:
குறிப்பாக இந்தியாவை தோற்கடிக்க சச்சின் டெண்டுல்கரை அவுட் செய்ய வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் அக்தர் போன்ற பவுலர்கள் வேண்டுமென்றே அதிரடியான வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்த நினைப்பார்கள். அதிலும் அவுட்டாகவில்லை என்றால் மண்டையை உடைக்கும் பீமர் பந்துகள் அல்லது உடலைத் தாக்கக்கூடிய பந்துகளை வீசி எப்படியாவது பெவிலியனுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் 1999இல் நடைபெற்ற ஒரு ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலியை அவுட் செய்யாமல் காயப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றே பாகிஸ்தான் திட்டம் தீட்டியதாக அப்போட்டியில் விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Ganguly

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அப்போட்டியில் நல்ல பார்மில் இருந்த கங்குலியை அவுட் செய்யாமல் உடலை காயப்படுத்தும் வகையில் அதிரடியான வேகத்தில் பந்து வீசுமாறு டீம் மீட்டிங்கில் முடிவெடுத்ததாக தெரிவிக்கும் சோயப் அக்தர் அதை வெற்றிகரமாக செய்து முடித்த பின் நேரடியாக கங்குலியிடமே தெரிவித்ததாக கூறியுள்ளார். விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையை ஒட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்த வரலாற்றுப் பின்னணியை முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் உடன் பகிர்ந்து கொண்டு சோயப் அக்தர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எப்போதுமே நான் பேட்ஸ்மேன்களின் தலை மற்றும் உடலை குறிவைத்து பந்துவீசுவேன். அந்த வகையில் அப்போட்டியில் நாங்கள் கங்குலியின் உடலை தாக்கும் வகையில் பந்து வீசுவதாக முடிவெடுத்தோம். சொல்லப்போனால் இந்திய பேட்ஸ்மேன்களை எப்படி தாக்க வேண்டும் என்பது பற்றி போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த டீம் மீட்டிங்கில் நாங்கள் அதை முடிவெடுத்தோம். அப்போது நான் “அவர்களை அவுட் செய்ய வேண்டாமா?” என்று எனது அணி நிர்வாகிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை, உங்களிடம் அதிரடியான வேகம் இருப்பதால் பேட்ஸ்மேன்களை சூடேற்றும் வேலையை மட்டும் செய்யுங்கள், விக்கெட்டுகள் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என பதிலளித்தார்கள்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட வீரேந்திர சேவாக் “நீங்கள் கொடுக்கும் இந்த பேட்டியை கங்குலியும் பார்ப்பார் என்று உறுதியாக நான் நம்புகிறேன்” என்று கூறினார். அதற்கு “அந்தத் திட்டத்தைப் பற்றி ஏற்கனவே அந்தப் போட்டிக்கு பின்பாக கங்குலியிடம் நான் கூறினேன். அதாவது உங்களை அவுட் செய்யப்போவதில்லை உடலில் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பந்து வீசினோம்” என்று சோயப் அக்தர் பதிலளித்தார்.

இதையும் படிங்க : IND vs ZIM : போட்டிக்கு முன்பு தேசப்பற்றை வெளிப்படுத்திய ராகுல் – ரசிகர்கள் பாராட்டும் 2 வைரல் வீடியோ உள்ளே

1999இல் இந்திய மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் மொகாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் சோயப் அக்தர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் அடிவாங்கி நிலைகுலைந்த கங்குலி பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் அதிலிருந்து குணமடைந்து அடுத்த சில மாதங்களில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் அதே சோயப் அக்தர், வாசிம் அக்ரம் போன்றவர்களை வெளுத்து வாங்கிய கங்குலி சதமடித்து தக்க பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement