வீடியோ : விராட் கோலியின் மேஜிக் வார்த்தையால் ஆர்சிபி முதல் வெற்றி – பிளே ஆஃப் செல்ல நிகழ வேண்டிய கால்குலேட்டர் முடிவு இதோ

- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று வரும் இந்த தொடரில் ஸ்மிரிதி மந்தனா, எலிஸ் பெரி, சோபி டேவின் போன்ற நட்சத்திர வீராங்கனைகளை வாங்கியதால் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் ஆடவர் அணியை மிஞ்சி மகளிர் ஐபிஎல் தொடரில் தங்களது அணி முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லப் போவதாக ஏலத்தின் போதே பெங்களூரு ரசிகர்கள் கெத்தாக பேசினார்கள். ஆனால் வழக்கம் போல சில நட்சத்திர வீராங்கனைகள் சொதப்பிய நிலையில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு தனது முதல் 5 போட்டிகளில் அடுத்தடுத்து வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்தது.

சொல்லப்போனால் 2008இல் தனது முதல் 5 போட்டிகளில் 1 வெற்றியை ஆடவர் பெங்களூரு அணி பதிவு செய்திருந்தது. ஆனால் அவர்களை மிஞ்சும் வகையில் 5 தோல்விகளை பதிவு செய்த மகளிர் பெங்களூரு அணி ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் தங்களது முதல் 5 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த முதல் கிரிக்கெட் அணியாக மோசமான சாதனை படைத்தது. அதனால் வழக்கம் போல பெங்களூரு அணியை தாறுமாறாக கலாய்த்த ரசிகர்கள் ஒரு போட்டியிலாவது வெல்லுங்கள் என்று ஸ்மிரிதி மந்தனாவின் முகத்துக்காக ஆதரவு கொடுத்தனர்.

- Advertisement -

விராட் கோலியின் மேஜிக்:
அந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதியன்று நடைபெற்ற 13வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணியை அபாரமாக பந்து வீசிய பெங்களூரு 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 (32) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 136 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு மீண்டும் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 0, சோபி டேவின் 14, எலிஸ் பெரி 10, ஹீதர் நைட் 24 என முக்கிய வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 60/4 என திணறிய அந்த அணியை கனிகா அகுஜா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 46* ரன்களும் ரிச்சா கோஸ் 31* (32) ரன்களும் எடுத்து காப்பாற்றினர். அதனால் 18 ஓவரில் 136/5 ரன்கள் எடுத்த பெங்களூரு மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து மிகப் பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டது. முன்னதாக இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக பெங்களூரு வீராங்கனைகளை சந்தித்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உத்வேகம் கொடுத்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்று அந்த அணி நிர்வாகம் போட்டியின் முடிவில் தெரிவித்தது.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலியின் உத்வேக வார்த்தைகள் வெற்றிக்கு உதவியதாக கேப்டன் மந்தனா போட்டியின் முடிவில் தெரிவித்தார். அந்த நிலையில் ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் விராட் கோலி பேசியது பின்வருமாறு. “நான் 15 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அது ஒவ்வொரு வருடத்திலும் இருக்கும் என்னுடைய ஆர்வத்தை நிறுத்தவில்லை. எனவே ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு தொடரிலும் நான் என்னுடைய முழு மூச்சுடன் வெற்றிக்காக விளையாடுகிறேன்”

“எனவே தற்போது எந்த மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டு தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில் எப்படி அசத்தலாம் என்று முயற்சி செய்யுங்கள். நாம் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இந்த உலகிலேயே நம்மிடம் சிறந்த ரசிகர்கள் உள்ளனர்” என்று கூறினார். அது போல அவர் பேசிய 8 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெங்களூரு ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறது. இதனால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் மீண்டும் அந்த அணி ரசிகர்கள் கால்குலேட்டரை கையிலெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:21 வருஷமா இதுக்காகத்தான் வெயிட் பண்ணேன். சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிறகு – சாம்சன் பகிர்ந்த சுவாரசியம்

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு செல்ல குஜராத் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு எதிரான தன்னுடைய கடைசி 2 லீக் போட்டியில் வென்றாக வேண்டும். அத்துடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் உத்தர பிரதேஷ் அணிக்கு எதிராக மும்பையும் 5வது இடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக டெல்லியும் தங்களது அடுத்த லீக் போட்டியில் வெல்ல வேண்டும். அது போக உத்திரபிரதேச அணியை குஜராத் தனது கடைசி லீக் போட்டியில் தோற்கடிக்க வேண்டும்.

Advertisement