ரிங்கு போல ஆஸி தவறவிட்ட தங்கமான பிளேயர்.. ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத சரவெடி சாதனை

Jake Frazer-McGurg 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. மே ஏழாம் தேதி நடைபெற்ற 56வது லீக் போட்டியில் வலுவான ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 50, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 86 (46) ரன்கள் எடுத்து போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் ராஜஸ்தான் போராடி தோற்றது.

- Advertisement -

ஆஸி தவறவிட்ட தங்கம்:
முன்னதாக அப்போட்டியில் டெல்லி அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசர்-மெக்குர்க் 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு வெறும் 19 பந்தில் அரை சதமடித்து 50 (20) ரன்கள் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெறும் 22 வயதாகும் அவர் உள்ளூர் ஒருநாள் போட்டியில் 29 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் (31 பந்துகள்) உலக சாதனையை உடைத்தார்.

அதன் காரணமாக டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அதே போல மும்பைக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அந்த 2 போட்டிகளிலும் 20 பந்துகளுக்குள் 50 ரன்கள் அடித்த அவர் ராஜஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்களை தொட்டார்.

- Advertisement -

அந்த வகையில் 3 போட்டிகளில் அவர் 20 பந்துகளுக்குள் 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 20 பந்துகளுக்குள் 3 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜேக் பிரேசர்-மெக்குர்க் படைத்துள்ளார். இதற்கு முன் 17 வருட ஐபிஎல் வரலாற்றில் கேஎல் ராகுல், யசஸ்வி ஜெய்ஸ்வால், கைரன் பொல்லார்ட், சுனில் நரேன், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் தலா 2 முறை 20 பந்துகளுக்குள் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 2007 சோகத்தை விரும்பல.. 2024 டி20 உ.கோ ஃபைனலில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி பற்றி.. லாரா கணிப்பு

இருப்பினும் இந்த வருடம் அறிமுகமான ஜேக் வெறும் 7 போட்டியிலேயே சரவெடியாக விளையாடி 17 வருடத்தில் நிகழாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட தங்கமான திறமையை கொண்ட அவரை இந்தியாவின் ரிங்கு சிங் போல 2024 டி20 உலகக் கோப்பை அணியில் ஆஸ்திரேலியா கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமில்லை என்ற காரணத்தால் அவரை ஆஸ்திரேலியா கழற்றி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement