வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலாவதாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலக கோப்பை தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 23 ஓவரில் வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் 43 (45) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் மீண்டும் 7, சூரியகுமார் யாதவ் 19 என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.
அசத்தல் கேட்ச்:
அந்த நிலையில் வந்த தாக்கூர் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் ரோகித் சர்மா தமக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி இஷான் கிசான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்களும் ரோகித் சர்மா 12* ரன்களும் எடுத்ததால் 22.5 ஓவரிலேயே 118/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரண்களை எடுக்க தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.
முன்னதாக 1975, 1979 உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான வெஸ்ட் இண்டீஸ் சமீபத்திய வருடங்களாகவே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதன் உச்சகட்டமாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது ஒட்டுமொத்த உலக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்காக நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மயர் 2021க்குப்பின் 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்த ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டது இந்திய ரசிகர்களை கூட திரும்பிப் பார்க்க வைத்து மகிழ்ச்சியடைய வைத்தது.
அந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் ப்ரெண்டன் கிங் 17, அலிக் அதனேஷ் 22, கெய்ல் மேயர்ஸ் 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் வெஸ்ட் இண்டீஸ் 45/3 என தடுமாறிய போது களமிறங்கிய அவர் ஒரு பவுண்டரியை அடித்து 11 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தையே பெற்றார். ஆனால் ரவீந்திர ஜடேஜா வீசிய 16வது ஓவரின் 4வது பந்தில் வித்தியாசமாக விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடிக்கும் முயற்சித்த அவர் லைனை முழுவதுமாக தவற விட்டு கிளீன் போல்டானார்.
மறுபுறம் தம்முடைய பந்து வீச்சில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் சரியான லைனை பின்பற்றி 2 வருடங்கள் கழித்து அவரை தாக்கத்தை ஏற்படுத்த விடாமல் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்து வந்த இளம் வீரர் ரோவ்மன் போவலையும் 4 (4) ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் வந்த ரோமரியா செஃபார்ட் ரவீந்திர ஜடேஜா வீசிய 18வது ஓவரின் 4வது பந்தில் அதிரடியான சிங்கள் எடுக்க முயற்சித்தார். ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் சுழலுக்கு தகுந்தார் போல் பேட்டை சுழற்ற தவறிய அவர் மிகப்பெரிய எட்ஜ் கொடுத்தார்.
இதையும் படிங்க:IND vs WI : இதுபோன்ற சேன்ஸ் நெறைய கெடைக்காது. 7-ஆம் இடத்தில் களமிறங்கியது குறித்து – ரோஹித் கொடுத்த விளக்கம்
அதை 2வது ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி பந்தை நோக்கியவாறு சென்று ஒரு காலில் முட்டி போட்டு ஒற்றை கையில் அற்புதமான கேட்ச் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். குறிப்பாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குறுகிய இடைவெளியில் வந்த பந்தை விராட் கோலி கச்சிதமாக பிடித்தது வர்ணனையாளர்களையும் இதர இந்திய வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.