வீடியோ : 556 நாட்கள் கழித்து கேப்டனாக வந்து கள்ளம் கபடம் இல்லாம உண்மைய உளறிய கிங் கோலி – ரசிகர்கள் கலகலப்பு

Virat Kohli RCB Captain
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மொகாலியில் நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னைக்கு எதிரான கடைசி போட்டியில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய கேப்டன் டு பிளேஸிஸ் இன்னும் குணமடையாத காரணத்தால் பகல் நேரத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஃபீல்டிங் செய்து முழுமையாக விளையாட முடியாது என்பதால் தன்னைத்தானே இம்பேக்ட் வீரராக மாற்றிக் கொண்டார். அவருக்கு பதிலாக நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்கள் கழித்து இந்த போட்டியில் பெங்களூருவை வழி நடத்தியது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அதே போல் பஞ்சாப் அணியிலும் ஷிகர் தவான் முழுமையாக குணமடையாததால் அவருக்கு பதிலாக சாம் கரண் கேப்டனாக செயல்பட்டார். அந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விராட் கோலி – டு பிளேஸிஸ் ஆகியோர் அதிரடியாக சேர்த்தனர். குறிப்பாக ஓவருக்கு 10 ரன்கள் எடுத்து அசத்தலாக செயல்பட்ட இந்த ஜோடி விரைவாக அரை சதம் கடந்து பஞ்சாப் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டது.

- Advertisement -

கேப்டனாக கிங் கோலி:
இருப்பினும் பவர் பிளே ஓவர்களுக்கு பின் பஞ்சாப் கச்சிதமாக பந்து வீசியதால் சற்று நிதானத்துடன் விளையாடிய இந்த ஜோடி 16.1 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 137 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது விராட் கோலி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (47) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 84 (56) ரன்கள் குவித்து சதமடிக்காமல் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றார்.

அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற கடைசியில் மஹிபால் லோம்ரர் 7* (9) ரன்களும் சபாஷ் அஹமத் 5* (3) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 174/4 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 556 நாட்கள் கழித்து விராட் கோலி பெங்களூருவின் கேப்டனாக செயல்பட்டது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடைசியாக 2021 சீசனில் பெங்களூருவை கேப்டனாக வழி நடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை நிறுத்தவும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த நிலையில் டாஸ் வீசுவதற்கு வந்த விராட் கோலி பஃப் இப்போட்டியில் டு பிளேஸிஸ் முழுமையாக ஃபீல்டிங் செய்ய முடியாது என்பதால் இம்பேக்ட் வீரராக செயல்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அதை விட 2வது இன்னிங்ஸில் டு பிளேஸிஸ்க்கு பதிலாக விஜய் குமாரை இம்பேக்ட் வீரராக மாற்றப் போகிறோம் என்பதையும் டாஸ் வீசும் போதே அவர் தெரிவித்தது பல ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

ஏனெனில் இம்பேக்ட் விதிமுறை என்பது முக்கிய நேரத்தில் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் புதிய வீரரை உள்ளே கொண்டு வந்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை வசமாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை விராட் கோலி ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டதால் அதற்கேற்றார் போல் பஞ்சாப் அணி தங்களுடைய 2வது இன்னிங்ஸில் ஏற்கனவே வகுத்த திட்டங்கள் மற்றும் தங்களுடைய இம்பேக்ட் வீரரை மாற்றியமைப்பதற்கு வழியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அமைந்தது.

இதையும் படிங்க:IPL 2023 : ஆக்சன், லேண்டிங், வேகம் எதுவுமே சரில்ல – முன்னேறலைனா காணாம போயிடுவீங்க, அர்ஜுன் பற்றி முன்னாள் பாக் வீரர் விமர்சனம்

அதனால் இவ்வளவு நாட்கள் கழித்து கேப்டனாக வந்தாலும் கள்ளம் கபடம் இல்லாமல் பெங்களூரு அணியின் திட்டத்தை உங்கள் வாயிலேயே எதிரணிக்கு சொல்லி விட்டீர்களே என்று விராட் கோலியை சில ரசிகர்கள் வெறுப்புடன் பாராட்டுகிறார்கள்.

Advertisement