முக்கிய நேரத்தில் பீல்டிங்கில் மொத்தமாக சொதப்பிய இந்தியாவின் இரு துருவங்கள் – ரசிகர்கள் அதிருப்தி

Virat Kohli Rohit Sharma Fielding
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்து அசத்தியது. அதனால் ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 3வது போட்டியில் சொதப்பிய இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

கேப்டன் ரோஹித் 15, ராகுல் 9, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹர்திக் பாண்டியா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 49/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்கள் குவித்து மானத்தை காப்பாற்றினார். ஆனால் அவருடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் வெறும் 6 (15) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

- Advertisement -

சொதப்பிய துருவங்கள்:
அதை தொடர்ந்து 134 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 24/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய அந்த அணியை 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஐடன் மார்க்கம் 52 (41) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய டேவிட் மில்லர் 59* (46) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார். அதனால் அசத்தலான வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா குரூப் 2 புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

மறுபுறம் பந்து வீச்சில் கடைசி ஓவர் வரை போராடியும் பேட்டிங்கில் 133 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா எக்ஸ்ட்ராவாக 15 – 20 எடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நிற்கிறது. பொதுவாக பேட்டிங், பவுலிங் ஆகிய துறையை விட ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டால் எடுக்காத 10 – 20 எக்ஸ்ட்ரா ரன்களை எளிதாக கட்டுப்படுத்தி வெற்றி பெறலாம் என்று வல்லுனர்கள் கூறுவார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்று இந்தியாவின் இரு துருவங்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் செயல்பட்டனர். ஆம் மோசமான தொடக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற முயன்ற ஐடன் மார்க்ரம் 63/3 என்ற நிலைமையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அஷ்வின் வீசிய 12வது ஓவரின் 5வது பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

அது பவுண்டரி எல்லையின் அருகே நின்ற விராட் கோலியை நோக்கி நேராக சென்றது. பொதுவாகவே அசாத்தியமான கேட்ச்களையும் அசால்டாக பிடித்து ஃபீல்டிங் துறையில் இதர வீரர்களுக்கு முன்னோடியாக திகழும் விராட் கோலி அந்த தருணத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அல்வா போல கைக்கு வந்த கேட்ச்சை கோட்டை விட்டார். அதனால் வர்ணனையாளர்களும் ரசிகர்களும் ஆச்சரியமடைந்தது போலவே பந்தை வீசிய அஷ்வினும் அதிர்ச்சியடைந்தார். அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலியும் சிரித்த முகத்துடன் தலையை தொங்கப் போட்டார். ஆனால் அதை பயன்படுத்திய மார்க்கம் 52 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை பறித்தார்.

அது மட்டுமா என்பது போல் முஹம்மது ஷமி வீசிய அடுத்த ஓவரிலேயே 5வது பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் தட்டுத் தடுமாறி சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால் அவர் வெள்ளை கோட்டை தொடுவதற்கு முன்பாகவே பந்தை கையிலெடுத்த ரோகித் சர்மா ரன் அவுட் செய்வதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தும் குறிபார்த்து எறிய தவறினார். அதனால் அவர் தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும் அதை பயன்படுத்திய மில்லர் இறுதியில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தார்.

இதையும் படிங்க : வீடியோ : வேணும்னே தோத்திங்க, இந்திய அணியின் மீது கோபத்தை நேரடியாக வெளிப்படுத்திய – பாக் வீரர்

அப்படி அடுத்தடுத்த ஓவர்களில் 2 முக்கிய வாய்ப்புகளை 2 முக்கிய வீரர்கள் கோட்டை விட்டது இந்திய ரசிகர்களையும் அதிருப்தியடைய வைத்தது. இப்படி சுமாராக ஃபீல்டிங் செய்ததற்கு நேற்றைய போட்டி நடந்த பெர்த் மைதானத்தில் ஈரப்பதமான வானிலை நிலவியதை ஒரு காரணமாக சொல்லவில்லை என்று ஒப்புக்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா அதில் நாங்கள் முன்னேற வேண்டுமென்று போட்டி முடிந்த பின் தனக்குத்தானே அதிருப்தியுடன் பேசினார்.

Advertisement