வீடியோ : எப்பா இத்தனை மீட்டரா? பிரம்மாண்ட சிக்ஸரை பறக்க விட்ட லார்ட் உமேஷ் யாதவை கொண்டாடும் ரசிகர்கள்

Umesh yadav Six
- Advertisement -

2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 2 – 0 என்ற கணக்கில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா டிசம்பர் 14ஆம் தேதியன்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறி இந்தியாவை மிடில் ஆர்டரில் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46 என முக்கிய வீரர்கள் பொறுப்புடன் ரன்களை குவித்து மீட்டெடுத்தார்கள்.

இறுதியில் 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்ததால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே நெருப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

முரட்டு சிக்ஸர்:
குறிப்பாக சாண்டோ 0, ஜாகிர் ஹசன் 20, யாசிர் அலி 4, லிட்டன் தாஸ் 24, கேப்டன் சாகிப் அல் ஹசன் 3, முஷ்பிகர் ரஹீம் 28 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 2வது நாள் முடிவில் 133/8 என்ற நிலைமையில் உள்ள வங்கதேசம் இந்தியாவை விட 271 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதல் பந்திலேயே சிராஜ் விக்கெட்டை எடுத்து வேட்டையை துவங்கிய நிலையில் அடுத்து வந்த யாசிர் அலியை உமேஷ் யாதவ் கிளீன் போல்ட்டாக்கினார். தற்போது வரை ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் சிராஜை விட 1.56 என்ற அற்புதமான எக்கனாமியில் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறார்.

அதை விட இப்போட்டியில் 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு தொல்லை கொடுத்த அஷ்வின் – குல்தீப் ஜோடி அவுட்டானதும் 10வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர் 2 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 15* (10) ரன்கள் குவித்து இந்தியா 400 ரன்கள் தொடுவதற்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டார். கடைசியில் முகமது சிராஜ் மட்டும் அவுட்டாகாமல் இருந்திருந்தால் அவர் இருந்த வேகத்திற்கு அதிரடியாக அரை சதத்தை அடித்திருப்பார் என்றே சொல்லலாம். குறிப்பாக வங்கதேசத்தின் ஹீரோ என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் மெஹதி ஹசன் வீசிய ஒரு பந்தில் முட்டி போட்டு அடித்த உமேஷ் யாதவ் முரட்டுத்தனமான சிக்சரை பறக்க விட்டார்.

- Advertisement -

அசால்டாக 100 மீட்டர்களை கடந்த அவரது சிக்ஸரை பார்த்து மெஹதி ஹசன் ஆச்சரியமடைந்து நின்றார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதே போல் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 31 ரன்களை 310.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் (குறைந்தபட்ச 30 ரன்கள்) அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர் என்ற உலக சாதனையை உமேஷ் யாதவ் ஏற்கனவே படைத்தார்.

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் இனி இவர்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் – வாசிம் ஜாபர் பாராட்டு

அப்போது முதலே இது போல் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டும் அவரை ரசிகர்கள் லார்ட் உமேஷ் என சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவது வழக்கமாகும். அந்த வகையில் இப்போட்டியில் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்டு இந்தியா 400 ரன்கள் தொடுவதற்கு முக்கிய பங்காற்றிய அவரை ரசிகர்கள் வழக்கம் போல பாராட்டுகிறார்கள். முன்னதாக உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் ஒரு சதமும் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement