
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த சீசனில் இதே மைதானத்தில் ஃபைனலில் மோதிய போது தோல்வியைப் பரிசளித்த குஜராத்துக்கு எதிராக இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு எதிராக வழக்கம் போல முதல் ஓவரிலேயே ட்ரெண்ட் போல்ட் ஸ்விங் செய்து அதிரடியான வேகத்தில் வீசினார்.
அதை எதிர்கொண்ட ரித்திமான் சஹா ஆரம்பத்திலேயே பவுண்டரி பறக்க விட்டாலும் 3வது பந்தில் டாப் எட்ஜ் கொடுத்தார். மிகவும் உயரே சென்று அந்த பந்தை பிடிப்பதற்கு கேப்டன் சஞ்சு சாம்சன் ஓடி வந்த நிலையில் 2 பக்க வாட்டிலிருந்து ஸ்லிப் பகுதிகளில் நின்று கொண்டிருந்த சிம்ரோன் ஹெட்மயர் மற்றும் சஹால் ஆகியோரும் ஓடி வந்தனர். இறுதியில் சஹால் பிடிப்பதற்கு சென்றாலும் உள்ளே புகுந்த சஞ்சு சாம்சன் பந்தை நழுவ விட்டார்.
கலகலப்பான கேட்ச்:
நல்ல வேலையாக அந்த பந்தை வீசிய ட்ரெண்ட் போல்ட் அந்த தருணத்தில் நடைபெற்ற அனைத்தையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். அதன் காரணமாக சஞ்சு சாம்சன் நழுவ விட்ட பந்தை கூலாக பிடித்த அவர் இதற்கு ஏம்ப்பா இவ்வளவு சண்டை போட்டுக்கிறீங்க என்ற என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.
அந்த வேடிக்கையான தருணம் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களையும் கலகலப்பாக மாற்றிய நிலைமையில் அடுத்த களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து அவசரப்பட்டு 2 பவுண்டரியுடன் 20 (19) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (19) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார்.
அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (34) ரன்கள் ஆட்டமிழந்ததால் மிடில் ஓவர்களில் குஜராத் தடுமாறியது. இருப்பினும் அந்த சமயத்தில் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடி காட்டிய நிலையில் அவருடன் தனது பங்கிற்கு சரவெடியாக விளையாடிய அபினவ் மனோகர் 3 சிக்சர்களை பறக்க விட்டு 27 (13) ரன்களை விளாசி தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி நேரத்தில் வேகமாக ரன்களை குவிக்கும் முனைப்புடன் விளையாடி டேவிட் மில்லர் 3 பவுண்டர் 2 சிக்ஸரருடன் 46 (30) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் 177/7 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளையும் சஹால், ஆடம் ஜாம்பா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். கடைசியாக இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களுடன் 30 ரன்களை அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு அகமதாபாத் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க:KKR vs MI : வெங்கடேஷ் ஐயரை நெனச்சா தான் மனசு கஷ்டமா இருக்கு – தோல்விக்கு பின் நிதீஷ் ராணா பேட்டி
எனவே பட்லர், சாம்சன் போன்ற அதிரடி வீரர்களைக் கொண்ட ராஜஸ்தான் 178 எளிதாக துரத்தி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருப்பின் சிறந்த பந்து வீச்சை கொண்ட குஜராத் அதற்கு சவாலை கொடுத்து தங்களது சொந்த ஊரில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற போராடி வருகிறது.