இலங்கையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது துவங்கியுள்ள 2023 சீசனில் ஜூலை 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர் மற்றும் தம்புலா ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த கால்லே 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 180/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தசுன் சனாக்கா 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42* (21) ரன்களும் பானுக்கா ராஜபக்சா 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48* (34) ரன்களும் எடுக்க தம்புலா சார்பில் அதிகபட்சமாக சன்வாஸ் தகாணி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய தம்புலா அணியும் 20 ஓவர்களில் கடுமையாக போராடி சரியாக 180 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தனஞ்செயா டீ சில்வா 43 (31) கேப்டன் குசால் பெரேரா 40 (25) அலெக்ஸ் ராஸ் 39 (28) ஹெய்டன் கெர் 20 (10) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடி முக்கிய ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்த நிலையில் கால்லே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சனாக்கா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
உள்ளே புகுந்த பாம்பு:
அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக கௌசன் ரஜிதா வீசிய சூப்பர் ஓவரில் குசால் பெரேரா 4 (3) அலெக்ஸ் ராஸ் 4* (2) ரன்கள் எடுத்த போதிலும் தம்புலா 9/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின் பினுரா பெர்னாண்டோ வீசிய சூப்பர் ஓவரில் ராஜபக்சா 10* (2) ரன்கள் எடுத்து கால்லே அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார். அப்படி சூப்பர் ஓவருடன் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 182 ரன்களை தம்புலா துரத்திய போது வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் 5வது ஓவரை வீசுவதற்காக வந்தார்.
அப்போது மிகப்பெரிய பாம்பு ஒன்று ரசிகர்களைப் போலவே கிரிக்கெட்டை பார்ப்பதற்காக எப்படியோ மைதானத்திற்குள் உள்ளே புகுந்தது. அதனால் மைதானத்திற்குள் பாம்பு வந்து விட்டதால் பந்து வீச முடியாது என சாகிப் அல் ஹசன் கையில் படம் எடுத்து சைகை காட்டியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் தொல்லை கொடுக்காத அந்த பாம்பு “அமைதியாக வெளியே செல்” என்று அன்பாக கூறிக்கொண்டே விரட்டிய 3வது நடுவரின் பேச்சை கேட்டு மைதானத்தை விட்டு வெளியேறியதால் போட்டி மீண்டும் நடைபெற்றது.
இதற்கு முன் பறவை, நாய் போன்ற பல்வேறு விலங்குகள் இப்படி கிரிக்கெட்டை ரசிகனாக பார்ப்பதற்கு வந்ததைப் போலவே இப்போட்டியில் பாம்பு வந்தது வீரர்களையும் வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனால் வழக்கம் போல அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாக துவங்கியது. அதை பார்த்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் “நாகின் மீண்டும் வந்து விட்டது. இருப்பினும் அது வங்கதேசத்தில் இருக்குமோ என்று நான் நினைத்தேன்” என தாறுமாறாக சிரிக்கும் வகையில் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதாவது இதே இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதஹாஸ் முத்தரப்பு டி20 தொடரின் முக்கிய போட்டியில் வென்ற மமதையில் சாகிப், முஸ்பிகர் ரஹீம் போன்ற வங்கதேச வீரர்கள் பாம்பு நடனமாடி இலங்கை அணியினர் மற்றும் ரசிகர்களை சொந்த மண்ணில் அவமானப்படுத்தினர். அந்த நிலையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை கடைசி நேரத்தில் 29* (8) ரன்கள் அடித்த தினேஷ் கார்த்திக் சிக்ஸருடன் ஃபினிஷிங் கொடுத்து அபாரமாக வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க:IND vs IRE : வாஷிங்க்டன் சுந்தருக்கு சேன்ஸ் குடுத்தது ஓகே. ஆனா இவருக்கு ஏன் சேன்ஸ் குடுக்கல – தமிழக ரசிகர்கள் கோபம்
அப்போது இந்தியாவின் வெற்றியை தங்களது வெற்றியை போல் கருதிய இலங்கை ரசிகர்கள் வங்கதேசத்தினருக்கு அதே பாம்பு நடனத்தை ஆடி பதிலடி கொடுத்தனர். அப்போதிலிருந்தே வங்கதேச அணியினரை பாம்பு மற்றும் பாம்பு நடனத்துடன் ஒப்பிட்டு அனைவரும் கலாய்ப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்த போட்டியில் பாம்பு உள்ளே புகுந்ததை வைத்து வங்கதேசத்தை தினேஷ் கார்த்திக் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.