உள்ளே புகுந்து அலறவிட்ட பாம்பு, மழை வராமலேயே 2 முறை நிறுத்தப்பட்ட 2வது டி20 போட்டி – என்ன நடந்தது?

Snake
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதனால் அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 237/3 ரன்கள் சேர்த்தது. ஆரம்பத்திலேயே தென் ஆப்பிரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கி 10 ஓவர்களில் 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (37) ரன்களும் அதிரடி காட்டிய ராகுல் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதை வீணடிக்காமல் அடுத்ததாக களமிறங்கி 3வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் சரவெடியாக செயல்பட்டு 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17* (7) ரன்கள் எடுக்க விராட் கோலி தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய மில்லர்:
அதை தொடர்ந்து 237 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் அர்ஷிதீப் சிங் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 1/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணியை காப்பாற்ற முயன்ற மார்க்ரம் அதிரடியாக 33 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் இணைந்து மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் அதிரடியாக ரன்களை சேர்த்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

நேரம் செல்ல செல்ல செட்டிலாகி சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறியதை பயன்படுத்திய டேவிட் மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்களும் டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்களும் எடுத்தனர். ஆனாலும் 20 ஓவர்களில் 221/3 ரன்களை மட்டுமே எடுத்து தென்னாபிரிக்கா போராடி தோல்வியடைந்தது. அதனால் தப்பி 16 ரன்கள் வித்யாசத்தில் போராடி வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

அலறவிட்ட பாம்பு:
முன்னதாக 2020இல் கடைசியாக இப்போட்டி நடைபெற்ற கவுகாத்தி மைதானத்தில் இலங்கையை இந்தியா எதிர்கொண்டபோது டாஸ் வீசிய பின் ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக ரத்து செய்தது. அந்த நிலைமையில் இம்முறையும் இப்போட்டியில் 50% மழைக்கான வாய்ப்பிருந்ததால் போட்டி தடைபடும் என்று ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்றமுறை கவுகாத்தி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்த வருண பகவான் இம்முறை அவர்கள் மீது கருணை காட்டி முழுமையாக போட்டி நடைபெற வழிவிட்டாலும் 2 முறை வேடிக்கையான காரணங்களுக்காக இப்போட்டி தடை பெற்றது.

முதலாவதாக ராகுல் – ரோஹித் ஆகியோர் 7 ஓவர்களில் 68/0 என்ற நல்ல தொடக்கத்தை கொடுத்தபோது யாருமே எதிர்பாராத வகையில் மைதானத்திற்குள் மிகப்பெரிய பாம்பு உள்ளே புகுந்ததால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. பொதுவாகவே பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது போல வளைந்து நெளிந்து அழையா விருந்தாளியாக இந்த பரபரப்பான கிரிக்கெட் போட்டியை பார்க்க ராஜாவைப் போல் நுழைந்த அந்த பாம்பை கண்டு இரு அணி வீரர்களும் சற்று பயத்துடன் நின்றதால் போட்டி நடைபெறவில்லை.

- Advertisement -

அந்த நிலையில் உடனடியாக உள்ளே வந்த மைதான பராமரிப்பாளர்கள் சிக்காமல் ரசிகர் கூட்டத்துக்குள் நுழைய முயன்ற அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த வகையில் குறைந்தது 5 – 10 நிமிடங்கள் தடைபெற்ற இப்போட்டி 2வது முறையாக 238 ரன்களை தென்னாப்பிரிக்கா துரத்தும் போது மீண்டும் தடை பெற்றது. அதை பார்த்த ரசிகர்கள் மைதானதுக்குள் வங்கதேச வீரர்கள் புகுந்து விட்டதாக கிண்டலடித்தனர்.

இதையும் படிங்க : அடுத்த போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடமாட்டார் – முன்கூட்டியே அறிவித்த ரோஹித் சர்மா (காரணம் என்ன?)

ஆம் அர்ஷிதீப் சிங் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை இழந்த தென்ஆப்பிரிக்கா 1/2 என தடுமாறிய போது மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த ராட்சத மின்விளக்கு மின்சாரம் இல்லாமல் திடீரென்று அணைந்ததால் சுமார் 10 நிமிடங்கள் மீண்டும் இப்போட்டி தடைபெற்றது. அதனாலேயே 10.30 மணிக்கு முடிய வேண்டிய இப்போட்டி 11 மணியை கடந்து தாமதமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement