இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதார் கோப்பை 2023 தொடர் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில் வடக்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வடக்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் போராடி 259/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஹில்லா 56* (52) கேப்டன் நிதிஷ் ராணா 54 (58) ஹர்ஷித் ராணா 54 (63) என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுக்க மேற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 260 ரன்களை துரத்திய மேற்கு மண்டலம் அணிக்கு கேப்டன் ப்ரியங் பஞ்சல் ஆரம்பத்திலேயே 14 (18) ரன்களில் அவுட்டாக நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் திரிபாதி 3 (15) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே அடுத்ததாக வந்து தடுமாறிய சமர்த் வியாஸ் 25 (27) ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் மறுபுறம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்த மற்றொரு தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் 56 (70) ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி சென்றார்.
துபே ஃபினிஷிங்:
அதனால் 25.3 ஓவரில் 122/4 என தடுமாறிய மேற்கு மண்டல அணியின் வெற்றி கேள்விக்குறியான போது நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே இளம் வீரர் கதன் படேலுடன் இணைந்து சரிவை சரி செய்ய போராடினார். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடியில் படேல் நிதானத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சிவம் துபே விரைவாக ரன்கள் சேர்த்து வெற்றிக்கு போராடினார்.
குறிப்பாக ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் பட்டம் என்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக செயல்பட்டு தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அப்படியே கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 83* (78) ரன்கள் குவித்த அவர் சிறப்பான ஃபினிசிங் கொடுத்தார்.
அவருடன் காதன் படேல் 63* (85) ரன்கள் எடுத்ததால் 48.5 ஓவரில் 260/4 ரன்கள் எடுத்த மேற்கு மண்டலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அந்த வகையில் ஐபிஎல் தொடரை போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக சிவம் துபே பவுண்டரியை விட அதிக சிக்ஸர்கள் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2016 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 2019 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
இருப்பினும் அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் அணிகளில் சுமாராகவே செயல்பட்டார். அந்த நிலையில் கடந்த வருடம் சென்னை அணியில் ஓரிரு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்த வருடம் கேரியரில் உச்சகட்டமாக 16 போட்டிகளில் 411 ரன்களை அடித்தார்.
அதிலும் 36 சிக்ஸர்களை அடித்த அவர் சென்னைக்காக ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ஷேன் வாட்சன் சாதனையும் சமன் செய்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோனியிடமிருந்து ஃபினிஷிங் உட்பட நிறையவற்றை கற்றுக்கொண்டதாக சிவம் துபே கூறியது பின்வருமாறு. “தோனியிடம் இருந்து நான் நிறைவற்றை கற்றுக்கொண்டு என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் செய்துள்ளேன். குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து ஃபினிஷிங் செய்வதை அவரிடம் கற்றுக் கொண்டேன்”
இதையும் படிங்க:வீடியோ : 1999 உ.கோ கிப்ஸ் போல ஆஷஸ் கோப்பையை கோட்டை விட்டாரா பென் ஸ்டோக்ஸ்? இங்கிலாந்து ரசிகர்கள் சோகம்
“அவை அனைத்தையும் சொல்ல முடியாது என்றாலும் ஃபினிஷிங் செய்வது போன்ற பெரிய யுக்திகளை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்” என்று கூறினார். அப்படி சென்னைக்காக அசத்தி உள்ளூர் தொடரிலும் அசத்துவதன் காரணமாக 2020க்குப்பின் 3 வருடங்கள் கழித்து வரும் செப்டம்பரில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக சிவம் துபே விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.