நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் கோப்பையை தக்க வைத்து அசத்தியுள்ளது. மறுபுறம் 22 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்ற ஜூலை 27ஆம் தேதி லண்டனில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து சற்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 395 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 91 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கோட்டை விட்டாரா ஸ்டோக்ஸ்:
அதைத்தொடர்ந்து 384 ரன்களை துரத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு 140 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறந்த தொடக்கம் கொடுத்த டேவிட் வார்னர் 60 ரன்களிலும் உஸ்மான் கவாஜா 72 ரன்களிலும் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார்கள். அப்போது வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 13 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் வழக்கம் போல அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஆனால் அப்போது மொய்ன் அலி வீசிய 66வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அவர் கையுறையில் எட்ஜ் கொடுத்தார். அதை லெக் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக தாவி மிகச் சிறப்பான கேட்ச் பிடித்த போதிலும் விக்கெட்டை கொண்டாடுவதற்கு துவங்கிய போது பந்தை தவற விட்டார். ஆனாலும் அது எல்பிடபிள்யூ இருக்குமோ என்று நினைத்த இங்கிலாந்தினர் ரிவியூ எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் 3வது நடுவராக இருந்த இந்தியாவை சேர்ந்த நித்தின் மேனன் அதை சோதித்துப் பார்த்த போது ஸ்மித் கைகளில் பந்து பட்டது தெளிவாக தெரிந்தது. அதனால் மிகவும் உயரே சென்ற பந்தை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் தாவி சரியாக பிடித்த போதிலும் கடைசியில் நழுவ விட்டது தெளிவாகத் தெரிந்ததால் ஸ்மித் அவுட் கொடுக்கப்படவில்லை.
ஆனாலும் அந்த தருணம் கிட்டதட்ட 1999 உலகக்கோப்பையின் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் கொடுத்த கேட்ச்சை பிடித்த ஹெர்சல் ஹிப்ஸ் விக்கெட்டை கொண்டாடத் துவங்கிய போது நழுவ விட்டு தென்னாபிரிக்காவின் உலக கோப்பை கனவையும் கோட்டை விட்டதற்கு நிகராக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் தற்சமத்தில் 5வது நாள் தேநீர் இடைவேளையில் 238/3 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இன்னும் வெறும் 146 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 7 விக்கெட்கள் கைவசம் இருக்கிறது.
அதிலும் களத்தில் ஸ்மித் 40*, ஹெட் 31* ரன்களுடன் இருப்பதால் ஆஸ்திரேலியாவின் வெற்றி பிரகாசமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை தற்போதைய நிலைமையை படி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் 22 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்று இங்கிலாந்து மிகப்பெரிய அவமானத்தை சந்திக்கும். அப்படி நடந்தால் அதற்கு நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் விட்ட கேட்ச் முக்கிய காரணமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க:வீடியோ : மீண்டும் வின்டேஜ் வகை அறிய காரில் ராஞ்சியை வலம் வந்த தோனி – இந்த கார்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஆனாலும் தற்போது மழை பெய்து வருவதால் இந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் தோல்வியை மழை தடுத்தது போல் இந்த போட்டியில் தங்களின் தோல்வியை தடுக்க வேண்டும் என்பதே இங்கிலாந்து ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.



