வீடியோ : பந்து தாக்கியதால் பகையை மறந்து நலம் விசாரித்த ஷாஹித் அப்ரிடி, முகம் கொடுக்காத கம்பீர் – ரசிகர்கள் அதிருப்தி

Afridi gambhir
Advertisement

ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் 2வது சீசன் மார்ச் 10ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. ரசிகர்களை மகிழ்வித்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த வருடம் ஓமனில் முதல் முறையாக நடைபெற்ற இந்த சீசனில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ் மற்றும் உலக ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. அதில் உலக ஜெய்ண்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் இத்தொடரின் 2வது சீசன் கத்தாரில் நேற்று துவங்கியது. முதல் போட்டியில் ஆசிய லயன்ஸ் மற்றும் இந்திய மஹாராஜாஸ் ஆகிய அணிகள் மோதின.

Gambhir

அதில் கெளதம் கம்பீர் தலைமையில் சுரேஷ் ரெய்னா ராபின், உத்தப்பா, முரளி விஜய், முகமது கைஃப் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் அடங்கிய இந்திய அணியை ஷாஹித் அப்ரிடி தலைமையில் தில்சன், மிஸ்பா போன்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த முன்னாள் வீரர்கள் எதிர்கொண்டது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்காக விளையாடிய போது பலமுறை பரம எதிரிகளுக்கு அடையாளமாக சண்டை போட்டு மோதிக்கொண்ட கௌதம் கம்பீர் மற்றும் சாகித் அப்ரிடி ஆகியோர் ஓய்வுக்கு பின்பும் ட்விட்டரில் பலமுறை மோதியதை எப்போதும் மறக்க முடியாது.

- Advertisement -

பகையை மறந்து:
அதனால் அந்த இருவரும் கேப்டனாக மோதிய இந்த போட்டி ரசிகர்களிடம் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அப்போது பழைய பகைமைகளை மறந்த சாகித் அப்ரிடி சிரித்த முகத்துடன் சற்று குனிந்தவாறு மரியாதையுடன் கை கொடுத்தார். ஆனால் அதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்ட கௌதம் கம்பீர் அவரை பார்க்காமல் தலையை குனிந்தவாறு கை கொடுத்தார்.

என்ன தான் பகைமை இருந்தாலும் அண்டை நாட்டு வீரர் அதை மறந்து கை கொடுக்கும் போது ஜென்டில்மேனாக சிரித்த முகத்துடன் கை கொடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் கம்பீர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய அணி 20 ஓவர்களில் 165/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உபுல் தரங்கா 40 (39) ரன்களும் மிடில் ஆர்டரில் மிஸ்பா-உல்-ஹக் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 73 (50) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பவிந்தர் அவானா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 166 ரன்களை துரத்திய இந்திய மகாராஜாஸ் அணிக்கு ராபின் உத்தப்பா டக் ஏமாற்றிய நிலையில் முரளி விஜய் 25 (19), சுரேஷ் ரெய்னா 3 (4) என முக்கிய வீரர்கள் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் பொறுப்புடன் செயல்பட்ட கேப்டன் கௌதம் கம்பீர் 7 பவுண்டரியுடன் 54 (39) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிறப்பாக செயல்பட வேண்டிய முகமது கைஃப் 22, யூசுப் தான் 14, ஸ்டூவர்ட் பின்னி 8, இர்பான் பதான் 19 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 20 ஓவர்களில் 156/8 ரன்களுக்கு இந்திய மகாராஜா அணியை மடக்கிய ஆசிய லயன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சோஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 12வது ஓவரில் அப்துல் ரசாக் வீசிய ஒரு பந்தை எதிர்கொண்ட கௌதம் கம்பீர் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இருப்பினும் எட்ஜ் ஆன பந்து அவரது தலையில் பட்டது. அப்போது சக பேட்ஸ்மேன் கூட அக்கறை காட்டாத நிலையில் ஷாஹித் அப்ரிடி மீண்டும் அருகில் வந்து கௌதம் கம்பீரிடம் நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க:IND vs AUS : 63 வருஷ சாதனையை முறியடித்த உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி – விவரம் இதோ

ஆனால் அப்போதும் முகம் கொடுக்காமல் கம்பீர் நடந்து கொண்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. இருப்பினும் பகையை மறந்த சாகித் அப்ரிடி போட்டி முடிந்த போது ஹர்பஜன் சிங்கை கட்டிப்பிடித்து கை கொடுத்தார். அதற்கு சிரித்த முகத்துடன் கை கொடுத்து தோளில் தட்டிக் கொடுத்த ஹர்பஜன் சிங் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்.

Advertisement