வீடியோ : உலகின் நம்பர் 1, 2 பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் காலி செய்த அஷ்வின் – ஸ்மித்துக்கு எதிராக வரலாற்று சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதியன்று டெல்லியில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை ஓரளவு தாக்குப்பிடித்து உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 50 ரன்கள் ஓப்பனிங் அமைத்த டேவிட் வார்னர் தடுமாற்றமாக செயல்பட்டு 15 ரன்களில் மீண்டும் முகமது ஷமியின் வேகத்தில் அவுட்டானார்.

அப்போது களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் தனது தரத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அவரை செட்டிலாக விடாத ரவிச்சந்திரன் அஸ்வின் 23வது ஓவரின் 4வது பந்தில் 15 ரன்களில் அவுட்டாக்கினார். ஆனால் அதை நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்தியா ரிவ்யூ எடுத்தது. அதை சோதித்த 3வது அம்பயர் அஸ்வின் பந்தில் லபுஸ்ஷேன் அவுட்டானது தெளிவாக தெரிந்ததால் முடிவை மாற்றி அறிவித்தர்.

- Advertisement -

ஸ்மித்தை தெறிக்க விடும் அஷ்வின்:
அதை தொடர்ந்து அடுத்த களமிறங்கிய உலகின் நம்பர் 2 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அதே ஓவரின் 5வது பந்தை தடுத்தாலும் 6வது பந்தில் அஷ்வினுடைய மாயாஜால சுழலில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அந்த வகையில் உலகில் நம்பர் ஒன் மற்றும் 2 ஆகிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னை உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்பதையும் உலகின் நம்பர் 2 பவுலர் என்பதையும் நிரூபித்தார்.

இத்தனைக்கும் அஸ்வினை சமாளிக்க வேண்டும் என்பதற்காக மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடி பிடித்து லபுஸ்ஷேன், ஸ்மித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்பாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யார் வந்தாலும் அசலுக்கு நிகராக முடியாது என்பது போல் அவர்களது திட்டத்தை தவிடு பொடியாக்கிய அஷ்வின் தம்மை தரத்திலும் தரமான வீரர் என்பதை நிரூபித்துள்ளார். குறிப்பாக இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கிய அஷ்வின் ஏற்கனவே கடந்த 2020 டிசம்பர் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் டக் அவுட் செய்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை 2 முறை டக் அவுட் செய்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அஸ்வின் மட்டுமே 3 முறை ஸ்டீவ் ஸ்மித்தை 5 ரன்களுக்கும் குறைவாக அவுட்டாக்கியுள்ளார். அவரை தவிர்த்து உலகில் வேறு எந்த பவுலரும் ஸ்மித்தை ஒரு முறைக்கு மேல் அவுட்டாக்கியதில்லை.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் கும்ப்ளேவுக்கு பின் 100 விக்கெட்களை எடுத்த 2வது பவுலர் என்ற மற்றொரு சாதனையும் அஷ்வின் படைத்தார். அவர்களைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும் மறுபுறம் நங்கூரமாக போராடிய உஸ்மான் கவஜா 81 ரன்களும் எடுத்து ஷமி மற்றும் ஜடேஜாவிடம் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : கபில் தேவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த ஜடேஜா – அசத்தல் சாதனை

அவருக்கு பின் வந்த அலெக்ஸ் கேரியை மீண்டும் அஷ்வின் டக் அவுட்டாக்கினார். அதனால் சுமாரான தொடக்கத்தை பெற்றுள்ள ஆஸ்திரேலியா முதல் நாள் தேநீர் இடைவெளியில் 199/6 என்ற ஸ்கோருடன் தடுமாறி வருகிறது. மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் இந்தியா முதல் நாளில் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்யும் முனைப்படும் விளையாடி வருகிறது.

Advertisement