வீடியோ : எப்புட்றா இருக்க? நம்பர் ஒன் பவுலர் சிராஜை பாராட்டி தமிழில் பேச வைத்த அஷ்வின் – முழுவிவரம் இதோ

Ashwin Siraj
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் களமிறங்குகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கும் முதல் போட்டி நடைபெறும் நாக்பூரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சிகளை முடித்த தமிழக வீரர் அஷ்வின் வழக்கம் போல தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுக்காக சுவாரசிய வீடியோவை பதிவேற்றினார்.

குறிப்பாக சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்துள்ள முகமது சிராஜ் பற்றி அஷ்வின் பாராட்டி பேசினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முகமது சிராஜ் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கியதால் முதல் போட்டியுடன் கழற்றி விடப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியில் ரன்களை வாரி வழங்கியதால் ரன் மெஷின் எனவும் அசோக் தின்டாவின் அடுத்த வாரிசு எனவும் உங்கள் அப்பாவைப் போல் ஆட்டோ ஓட்டச் செல்லுங்கள் எனவும் கிண்டல்களுக்கு உள்ளானார்.

- Advertisement -

தமிழில் பேச முயற்சி:
இருப்பினும் பெங்களூரு அணியில் அப்போதைய கேப்டன் விராட் கோலிதொடர்ந்து நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்ததை பயன்படுத்திய அவர் மனம் தளராமல் போராடி சிறப்பாக செயல்பட்டார். அதனால டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி காபா போன்ற வெற்றியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2022 பிப்ரவரி மாதம் தன்னுடைய கேரியரின் 2வது போட்டியில் விளையாடினார். அதிலிருந்து பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதால் மடமடவென தரவரிசையில் முன்னேறிய அவர் இன்று நம்பர் ஒன் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

அப்படி கிண்டல்களையும் தடைகளையும் உடைத்து சாதனை படைத்த அவரிடம் “நம்பர் ஒன் ஒருநாள் பவுலர். எப்படிடா இருக்க. எப்படி ஃபீல் பண்ற” என்று ஜாலியாக பாராட்டிய அஷ்வின் சிராஜை தமிழில் பேச வைக்கும் முயற்சித்தார். ஆனால் தமிழ் தெரியாத சிராஜ் சிரித்துக் கொண்டே நல்லபடியாக உணர்கிறேன் என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பயிற்சி முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது மீண்டும் காரில் பேட்டி எடுத்த அஷ்வின் நம்பர் ஒன் இடத்தை அடைந்ததை பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள் என்று இம்முறை ஹிந்தியில் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு சிராஜ் பதிலளித்தது பின்வருமாறு. “நான் சிறப்பாக உணர்கிறேன். ஆனால் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக வருவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இந்த இடத்தை பிடித்ததில் மிகவும் நல்லபடியாக உணர்கிறேன்” என்று கூறினார். அப்படி இந்திய வீரர்கள் மிகவும் ஜாலியாக பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து துவங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அஷ்வின் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்பதை கருத்தில் கொண்டு அவரைப் போலவே பந்து வீசும் லோக்கல் பவுலருக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயம் சமீப காலங்களில் வெளிநாடுகளில் லண்டன் லார்ட்ஸ், காபாவில் சரித்திர வெற்றிகளை பெறுவதற்கு முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த டாப் 5 வீரர்களின் பட்டியல்

எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு ஏற்கனவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பலாம். மொத்தத்தில் அனல் பறக்கப் போகும் இந்த தொடரில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement