நேரலையில் போக்கஸ் பண்ணும் போது சிக்கிய அஷ்வினின் விசித்திரமான செயல் – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இதுவரை ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ள முதல் மற்றும் சூப்பர் 12 சுற்றில் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் 15 வருடங்களுக்கு பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. அதை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா ஃபைனலுக்குச் செல்ல இந்தியா போராட உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் சுழல் பந்து வீச்சுத் துறையில் சுமாரான பார்மில் தவிக்கும் சஹாலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆரம்ப முதலே ரசிகர்கள் பாராட்டும் வகையில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். பொதுவாகவே ஆஸ்திரேலியா மைதானங்கள் சுழல் பந்து வீச்சுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்காது என்ற நிலைமையில் குறைவான விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை குறைவாக கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீசி வரும் அவர் பேட்டிங்கில் கடுகு சிறுத்தாலும் காரம் பெரியது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

போக்கஸில் சிக்கிய அஷ்வின்:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி கொண்டு வந்த வெற்றியை கடைசி ஓவரில் களமிறங்கி சொதப்பிய தினேஷ் கார்த்திக் தாரை வார்க்கப் பார்த்தார். ஆனால் அவர் செய்த தவறை செய்யாமல் கடைசி பந்தை தூக்கி அடித்து வரலாற்று வெற்றியை உறுதி செய்த அஷ்வினை கொண்டாடாத ரசிகர்களே கிடையாது. அதே போல் வங்கதேசத்துக்கு எதிரான வென்றாக வேண்டிய முக்கிய போட்டியிலும் தினேஷ் கார்த்திக் சொதப்பிய நிலையில் முக்கியமான 13* (6) ரன்களை எடுத்த அவர் 5 ரன்கள் வித்யாசத்தில் திரில் வெற்றிக்கு உதவினார்.

மேலும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலடியாக ஜிம்பாப்பேவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார். முன்னதாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியின் துவக்கத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பின்புறத்தில் நின்ற அஷ்வின் மைதானத்தில் கிடந்த 2 ஜெர்சிகளை கையிலெடுத்து தன்னுடையது எது என்பதை கண்டுபிடிப்பதற்காக மோப்பம் பிடித்தார். அதன் முடிவில் ஒரு சில நொடிகளிலேயே சரியானதை கண்டறிந்த அவர் தன்னுடையதை எடுத்துக் கொண்டு மற்றொன்றை கீழே போட்டு விட்டு சென்றார்.

- Advertisement -

அதை யாருமே கவனிக்காத நிலையில் ஒரு ரசிகர் மட்டும் தொலைக்காட்சியில் டாஸ் வீசப்பட்ட போது துல்லியமாக ரோகித் சர்மாவுக்கு பின்னாடி அவர் செய்த இந்த வேலையை போக்கஸ் செய்து வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதிலும் “அஷ்வின் அண்ணா, மேலாதிக்கம். இந்த வகையில் தான் உங்களுடைய துணியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவருடைய மற்றுமொரு திறமையை அந்த ரசிகர் கலகலப்புடன் பாராட்டியுள்ளார்.

அதை பார்த்த இதர ரசிகர்கள் பள்ளி அல்லது கல்லூரியில் நண்பர்களுடன் ஹாஸ்டல் அறையில் தங்கியிருந்தால் ஒன்றாக கலந்து கிடக்கும் துணிமணிகளுக்கு மத்தியில் தங்களுடைய துணியை தங்களுடைய வியர்வை வாசத்தை வைத்து கண்டுபிடிக்கும் சிறு பிள்ளைத்தனமான யுக்தியை அஷ்வின் கையாண்டதாக கலகலப்புடன் பேசுகிறார்கள். மேலும் அதைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் எதை வைத்து உங்களுடைய சரியான ஜெர்சியை கண்டறிந்தீர்கள் என்று அஸ்வினிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

ஆனால் எளிமையாக இருந்தாலும் இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அஷ்வினை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நீக்கி விட்டு சஹாலுக்கு வாய்ப்பளிக்குமாறு சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : பைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும். ஒரே வாரத்தில் உல்ட்டாவாக பேசிய சோயிப் அக்தர் – கலாய்க்கும் ரசிகர்கள்

ஆனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக அவர் மட்டும் பேட்டிங்கில் அந்த முக்கிய ரன்களை எடுக்காமல் போயிருந்தால் இந்தியா இன்று செமி பைனலுக்கே வந்து இருக்காது என்று விமர்சனங்களுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். அதனால் இந்த உலகக்கோப்பையில் முழுமையாக விளையாடுவதற்கு அவர் மட்டுமே தகுதியானவர் என்றும் ரசிகர்கள் ஆதரவு கொடுக்கின்றனர்.

Advertisement