13 சரவெடி சிக்ஸர்கள், 16 பந்தில் 50 – மாபெரும் ஃபைனலில் அடித்து நொறுக்கி மும்பையை வெற்றி பெற வைத்த நிக்கோலஸ் பூரான்

Nicholas Pooran
- Advertisement -

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற மேஜர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் அணி வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை 14இல் துவங்கிய இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறினாலும் முக்கிய போட்டிகளில் வென்ற எம்ஐ புள்ளி பட்டியலில் 4வது இடம் பிடித்து நூலிழைலையில் ரன் ரேட் உதவியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த வாய்ப்பில் எலிமினேட்டரில் வாஷிங்டன் அணியை தோற்கடித்த எம்ஐ குவாலிபயர் 2 போட்டியில் பரம எதிரியான சென்னை நிர்வகிக்கும் டெஸ்சாஸை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சீட்டல் ஆர்க்கஸ் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 183/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் குயின்டன் டீ காக் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 87 (52) ரன்கள் எடுக்க எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சரவெடி பூரான்:
அதை தொடர்ந்து 184 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு ஸ்டீபன் டெய்லர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரான் தமக்கே உரித்தான ஸ்டைலில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் ட்வயன் பிரிட்டோரியஸ் வீசிய 3வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் 3வது பந்தில் பவுண்டரியும் 4வது பந்தில் சிக்சரும் விளாசி தன்னுடைய வேட்டையை துவக்கினார்.

அந்த வேகத்திலேயே தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு மேஜர் லீக் டி20 தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அந்த நிலைமையில் மறுபுறம் தடுமாறிய ஜஹாங்கீர் 10 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் தொடர்ந்து பட்டையை கிளப்பிய பூரான் அட்டகாசமான சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்து தன்னுடைய அணியை வெற்றி பாதையில் அழைத்து வந்தார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் தடுமாறிய மற்றொரு இளம் வீரர் தேவாலட் ப்ரேவிஸ் 20 (18) ரன்களில் அவுட்டானலும் எதிர்ப்புறம் எதிரணி பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு கட்டுக்கடங்காமல் அடித்த பூரான் 43 பந்துகளில் சதமடித்து எம்ஐ வெற்றியை உறுதி செய்தார். அப்போதும் ஓயாத அவர் இறுதி வரை அவுட்டாகாமல் பவுண்டரியுடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 16 ஓவரிலேயே எம்ஐ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

அந்த வகையில் மொத்தமாக 10 பவுண்டரி 13 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 137* (55) ரன்களை 249.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி கேப்டனுக்கு அடையாளமான இன்னிங்ஸ் விளையாடி தம்முடைய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அத்துடன் இந்த தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் ஆகிய இரட்டை சாதனைகளையும் படைத்த அவர் முதல் சீசனிலேயே அமெரிக்காவில் மும்பையின் வெற்றி கொடியை பறக்க விட உதவியது இந்தியாவில் இருக்கும் அந்த அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:அடுத்த 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரானது இந்தியாவில் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு

முன்னதாக ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணியில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டும் சுமாராக செயல்பட்ட நிக்கோலஸ் பூரான் இந்த வருடம் லக்னோ அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தத் தொடரிலும் அசத்திய அவர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது லக்னோ அணி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனாலும் சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை குவாலிபயர் தொடரில் இந்த அடியை அவர் காட்டாததால் வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement