நாட்டுக்காக ஒத்த காலில் விளையாடிய நேதன் லயன் – அரிப்பணிப்பை எழுந்து பாராட்டிய லார்ட்ஸ் ரசிகர்கள்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பது நிரூபித்தது. அந்த நிலைமையில் ஜூன் 28ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 48, பென் டூக்கெட் 98, ஓலி போப் 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பால் 188/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியா விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் ஸ்டைலுக்காக அதிரடியாக விளையாட முயற்சித்த அந்த அணி கடைசி 7 விக்கெட்டுக்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து 325 ரன்களுக்கு சுருண்டது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

லயனின் அர்ப்பணிப்பு:
அதை தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் தடுமாற்றமாக செயல்பட்டு 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 373 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலையில் 4வது நால் முடிவில் அந்த அணி 114/4 ரன்களுடன் போராடி வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்பின்னர் நேதன் லயன் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையை இப்போட்டியில் படைத்தார். குறிப்பாக 2013 முதல் தொடர்ந்து 10 வருடமாக ஃபார்ம் மற்றும் காயம் ஆகியவற்றை கடந்து 100 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய அவருடைய சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது. ஆனால் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது காயத்தை சந்தித்த அவர் பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

அந்த நிலையில் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட அவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு கைத்தடி உதவிகளுடன் 4வது நாள் ஆட்டத்தில் நடக்க முடியாமல் வந்தது ஆஸ்திரேலிய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக 10 வருடங்களாக காயத்தை சந்திக்காமல் உலக சாதனை படைத்த அவருக்கு இப்படி ஒரு நிலையா? என்று இதர ரசிகர்களும் விரைவில் குணமடையுமாறு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அந்த காரணத்தால் அவர் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வர மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 9 விக்கெட்டுகள் இழந்த போது தமது காயத்தை பொருட்படுத்தாத அவர் 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதலாம் என்ற எண்ணத்துடன் தைரியமாக மெதுவாக களமிறங்கி வந்தது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. குறிப்பாக சற்று நொண்டி நொண்டியே நடந்து வந்த அவருடைய அர்பணிப்பை பார்த்த லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

அந்த மாபெரும் உற்சாகத்துடன் களமிறங்கிய அவர் மிட்சேல் ஸ்டார்க் சிக்ஸர் அடிக்க முயற்சித்த பந்தை ரெஹன் அஹ்மத் பவுண்டரி எல்லையில் அபாரமாக தடுத்த போது நொண்டி நொண்டி ஓடி சிங்கிள் எடுத்து தடுமாறி கீழே விழத் தெரிந்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் பரிதாபப்பட வைத்தது.

இதையும் படிங்க:Ashes 2023 : உச்சக்கட்ட பரபரப்பில் 2வது டெஸ்ட், தெறிக்க விடும் ஆஸி – சூப்பர்மேனாக காப்பாற்றுவாரா பென் ஸ்டோக்ஸ்?

அப்படி ஒற்றைக்காலிலேயே 13 பந்துகள் வரை தாக்குப்பிடித்து 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்த லயன் ஆஸ்திரேலியா கடைசி விக்கெட்டுக்கு வெற்றியை தீர்மானிக்க கூடிய 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த வகையில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடிய அவரை அவுட்டாகி செல்லும் போதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றது நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது.

Advertisement