Ashes 2023 : உச்சக்கட்ட பரபரப்பில் 2வது டெஸ்ட், தெறிக்க விடும் ஆஸி – சூப்பர்மேனாக காப்பாற்றுவாரா பென் ஸ்டோக்ஸ்?

ENg vs AUS Mitchel Stac Ben Stokes
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. குறிப்பாக அதிரடியாக விளையாடி தைரியமாக டிக்ளர் செய்கிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றியை இங்கிலாந்து தாரை வார்த்தது அந்நாட்டு முன்னாள் வீரர்களை கொந்தளிக்க வைத்தது. இருப்பினும் ஒரு தோல்விக்காக அசரப் போவதில்லை என்று அறிவித்த பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடுவோம் என்று தெரிவித்தார்.

அந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து 110 ரன்களும் டிராவிஸ் ஹெட் 77 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 48, பென் டூக்கெட் 98, ஓலி போப் 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ரன் குவிப்பால் 188/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

தடுமாறும் இங்கிலாந்து:
ஆனால் அதன் பின் ஆஸ்திரேலிய விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் ஜோ ரூட் 10, ஹரி ப்ரூக் 50, பென் ஸ்டோக்ஸ் 18, ஜானி பேர்ஸ்டோ 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஸ்டைலுக்காக அதிரடியாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் கடைசி 7 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்தை 325 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 89 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸில் தடுமாற்றமாகவே செயல்பட்டு 279 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் ப்ராட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 371 ரன்களை சேசிங் செய்வதற்காக களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, ஓலி போப் 3, ஜோ ரூட் 18, ஹரி ப்ரூக் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 45/4 என பெரிய சரிவை சந்தித்த அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் உடன் இணைந்து சரிவை சரி செய்வதற்காக போராடினார். அதில் பென் டூக்கெட் 50* ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 29* ரன்களும் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் நிறைவு பெற்ற 4வது நாள் முடிவில் 114/4 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 257 ரன்கள் தேவைப்படுகிறது. மறுபுறம் மீண்டும் பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவுக்கு கடைசி நாளில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்படுவதால் முதல் போட்டியை போலவே இந்த போட்டியும் உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

குறிப்பாக இன்னும் ஒரு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தால் இந்த போட்டியில் இங்கிலாந்து எளிதாக வெல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். சொல்லப்போனால் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள இங்கிலாந்து கடைசி நாளில் நங்கூரமாக நின்று எப்படியாவது இப்போட்டியில் வென்று பதிலடி கொடுக்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொதுவாகவே கடைசி நாளில் வெறும் 150 ரன்கள் கூட சேசிங் செய்வது மிகப்பெரிய சவாலான காரியமாகும்.

இதையும் படிங்க:TNPL 2023 : ஒப்பனிங்கிலேயே நொறுக்கிய ஜோடி – நெல்லையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய திண்டுக்கல், வெய்ட் காட்டியது எப்படி?

அந்த நிலையில் களத்தில் இருப்பவர்களை தவிர்த்து இங்கிலாந்துக்கு இன்னும் ஜானி பேர்ஸ்டோ மட்டுமே தரமான பேட்ஸ்மேனாக உள்ளார். அந்த நிலையில் ஆஸ்திரேலிய போன்ற தரமான பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து தாக்குபிடித்து வெற்றி காண்பது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த போட்டியில் கடைசி நாளில் மழைக்கான வாய்ப்பில்லை என்ற நிலைமையில் தரமாக செயல்படுபவர்களை நோக்கி வெற்றி வருவதற்கு தயாராக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement