TNPL 2023 : ஒப்பனிங்கிலேயே நொறுக்கிய ஜோடி – நெல்லையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய திண்டுக்கல், வெய்ட் காட்டியது எப்படி?

TNPL 23
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 1ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற 23வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெல்லைக்கு தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் தடுமாறி 6 ரன்னில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் அடுத்து வந்த நிதிஷ் ராஜகோபால் 13 (11) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபுறம் 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று போராடிய மற்றொரு தொடக்க வீரர் அருண் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (33) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் மிடில் ஓவர்களில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய அந்த அணிக்கு அஜிதேஷ் குருசாமி 17 (14) ரன்களும் ரித்திக் ஈஸ்வரன் 18 (13) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் சோனு யாதவ் அதிரடியாக 22 (17) ரன்களும் ஹரிஷ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 34* (21) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதனால் 20 ஓவர்களில் நெல்லை 159/7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக மதிவாணன் மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜி கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கட்டும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் மற்றும் சிவம் சிங் ஆகிய தொடக்க வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை விடாமல் நிதானம் கலந்த அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அதில் ஒருபுறம் விமல் குமார் நிதானமாக விளையாட மறுபுறம் சிவம் சிங் சற்று அதிரடியாக செயல்பட்டு ரன்களை சேர்த்தார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று பெரிய சவாலை கொடுத்த இந்த ஜோடியை உடைக்க நெல்லை பவுலர்கள் மிகவும் தடுமாறினார்கள். அதை பயன்படுத்தி 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் சிவம் சிங் 7 பவுண்டரியுடன் 51 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் 3 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 62 (53) ரன்கள் குவித்து அசத்திய விமல் குமார் வெற்றியை உறுதி செய்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த சுபோத் பாத்தி 10 (10) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கடைசியில் கேப்டன் பாபா இந்திரஜித் 10* (10) ரன்களும் ஆதித்யா கணேஷ் 13* ரன்களும் எடுத்ததால் 19.3 ஓவர்களிலேயே 160/3 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றி பெற்றது.

மறுபுறம் பேட்டிங்கில் போராடக்கூடிய ரன்களை எடுத்தும் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு வெற்றியை கோட்டை விட்ட நெல்லை சார்பில் அதிகபட்சமாக மோகன் பிரசாத் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். மேலும் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை 100% உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க:2023 உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்களில் இவர் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பிருக்கு – தினேஷ் கார்த்திக்

அதனால் அடுத்த 2 போட்டிகளில் 1 வெற்றியை பதிவு செய்தாலே திண்டுக்கல் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும். மறுபுறம் 6 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த நெல்லை 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதன் காரணமாக அடுத்த 1 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

Advertisement