TNPL 2023 : இவர் தான் ரியல் 3டி பிளேயர், தல தோனி போலவே கேப்டனாக அசத்திய ஷாருக்கான் – யாருமே எதிர்பார்க்காத மாஸ் சாதனை

- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற கோவை கிங்ஸ் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் மொத்தம் களமிறங்கிய 8 அணிகளில் இளம் வீரர் ஷாருக்கான் தலைமை தாங்கிய கோவை கிங்ஸ் ஆரம்ப முதலே சிறப்பாக செயல்பட்டு 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. அதே வேகத்தில் பிளே ஆஃப் சுற்றில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியல் 2வது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை தோற்கடித்த கோவை நேரடியாக ஃபைனலுக்கும் தகுதி பெற்றது.

மறுபுறம் 3வது இடம் பிடித்து மதுரை அணியை எலிமினேட்டரில் வீழ்த்திய நெல்லை குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல்லையும் தோற்கடித்து ஃபைனலுக்கு வந்தது. அந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கோவையின் கேப்டன் ஷாருக்கான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். குறிப்பாக இந்த சீசனில் டாஸ் வென்று சேசிங் செய்த அணிகளே நிறைய வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் ஃபைனலில் அவர் வித்தியாசமான முடிவை எடுத்தார்.

- Advertisement -

தல தோனியின் வழியில்:
அதற்கேற்றார் போல் முதலில் பேட்டிங் செய்த கோவை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 205/5 ரன்களை விளாசி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக சுரேஷ்குமார் 57 (33) முகிலேஷ் 51* (40) அத்திக் உர் ரஹ்மான் 50 (21) என முக்கிய வீரர்கள் அதிரடியான ரன்களை எடுக்க நெல்லை சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ், சந்திப் வாரியர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் அதை துரத்திய நெல்லை சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 15 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 27 (14) ரன்கள் எடுக்க கோவை சார்பில் அதிகபட்சமாக சுப்பிரமணியன் 4 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரை விட 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் சாருக்கான் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார் என்றே சொல்லலாம். சமீப காலங்களாகவே உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் 2021 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் கர்நாடகவுக்கு எதிரான மாபெரும் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 33* (15) ரன்களை விளாசி தமிழகத்திற்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது.

- Advertisement -

அந்த வகையில் தமிழகத்தின் ஃபினிஷர் என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 9 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் இதுவரை 31 இன்னிங்ஸில் 426 ரன்களை 134.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அந்த வரிசையில் இந்த டிஎன்பிஎல் தொடரில் 7 இன்னிங்ஸில் 133 ரன்களை 190 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் தம்முடைய அணிக்கு மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டார்.

அதை விட பகுதி நேர பவுலராக அறியப்படும் அவர் இந்த தொடரில் 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 6.66 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக சாதனை படைத்து அதற்காக வழங்கப்படும் ஊதா தொப்பியை வென்று ரசிகர்கள் நினைத்துப் பார்க்காத சாதனை படைத்துள்ளார். மேலும் கேப்டனாக ஆரம்பம் முதலே அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் கிட்டத்தட்ட தல தோனியை போலவே சிறந்த கேப்டன் மற்றும் அதிரடியான ஃபினிஷராக செயல்பட்டு பவுலராகவும் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : ஆண்டர்சன், வார்னே ஆல் டைம் சாதனைகளை தூளாக்கிய அஸ்வின் – 700 விக்கெட்டுகளுடன் படைத்த 5 சாதனை பட்டியல் இதோ

அதனால் இவர் தான் உண்மையான முப்பரிமான என்று பாராட்டினால் மிகையாகாது என்றே சொல்லலாம். அதை விட ஃபைனலில் வென்ற பின் பரிசளிக்கப்பட்ட வெற்றிக் கோப்பையை தோனியை போலவே கையில் வாங்கியதும் அடுத்த சில நொடிகளில் வீரர்களிடம் ஒப்படைத்து ஷாருக்கான் ஒதுங்கினார். அப்போது மற்றொரு வீரர் “இங்கேயே நில்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டும் தோளில் தட்டிக் கொடுத்து கொண்டாடுமாறு சொன்ன ஷாருக்கான் தல தோனியின் வழியில் நடந்து கொண்டார் என்றால் மிகையாகாது.

Advertisement