TNPL 2023 : ஃபைனலில் நெல்லையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோவை – அசத்தல் சாதனையுடன் கோப்பையை தக்க வைத்தது எப்படி?

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வந்த டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. கடந்த ஜூன் 12ஆம் தேதி துவங்கிய அந்த தொடரில் 28 போட்டியில் கொண்ட லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சாருக்கான் தலைமையிலான நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் குவாலிஃபயர் 1 போட்டியில் 2வது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் 3வது இடம் பிடித்த நெல்லை எலிமினேட்டரில் மதுரையை தோற்கடித்து குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல்லை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஃபைனலுக்கு முன்னேறியது.

அந்த நிலைமையில் நடப்புச் சாம்பியன் கோவை மற்றும் நெல்லை அணிகள் மோதிய இந்த மாபெரும் இறுதிப்போட்டி திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கோவை இத்தொடரில் பெரும்பாலான அணிகள் முதலில் பந்து வீச தீர்மானிக்கும் முடிவை எடுக்காமல் மாற்றி யோசித்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கோவை அணிக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் சுஜயை 7 (7) ரன்களில் அவுட்டாக்கிய சந்திப் வாரியர் அடுத்து வந்த பி சச்சினையும் 12 (10) ரன்னில் அவுட்டாக்கி மிரட்டினார்.

- Advertisement -

கோவை மெகா வெற்றி:
அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த முகிலேஷ் மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ் குமாருடன் ஜோடி சேர்ந்து விரைவான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அந்த ஜோடியில் சுரேஷ்குமார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 57 (33) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஷாருக்கான் 7 (5) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்ததாக வந்த அதிக் உர் ரஹ்மான் போட்டியை தலைகீழாக மாற்றும் அளவுக்கு சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (21) ரன்கள் விளாசி 5வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோவையை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். இறுதியில் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் நிதானமாக பேட்டிங் செய்த முகிலேஸ் 4 பவுண்டரி 1 சிக்ருடன் 51* (40) ரன்களும் ராம் அரவிந்த் 10* (4) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் கோவை 205/5 ரன்கள் எடுக்க நெல்லை சார்பில் அதிகபட்சமாக சந்திப் வாரியர் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 206 என்ற மெகா இலக்கை துரத்தியச் நெல்லைக்கு முதல் ஓவரிலேயே ஸ்ரீ நிரஞ்சன் டக் அவுட்டாக அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் அஜித்தேஷ் குருசாமி 1 (2) ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஏற்பட்ட சரிவை மறுபுறம் கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு சரி செய்ய போராடிய போது கோவை கேப்டன் ஷாருக்கான் 27 (14) ரன்களில் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்ததுடன் அடுத்து வந்த நிதீஷ் ராஜகோபாலையும் 13 (16) ரன்களில் காலி செய்தார்.

அதை விட சுப்பிரமணியன் வீசிய 8வது ஓவரில் ரித்திக் ஈஸ்வரன் 4 (6) சூரியபிரகாஷ் 22 (22) என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் 62/6 என சரிந்த நெல்லைக்கு ரன் ரேட் மும்மடங்கு அதிகமாகி அழுத்தத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் வெறும் 15 ஓவரிலேயே நெல்லையை 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய கோவை 104 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று டிஎன்பிஎல் வரலாற்றில் சேப்பாக் அணியை தொடர்ந்து அடுத்தடுத்த கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியன் அந்தஸ்தை மீண்டும் தக்க வைத்த 2வது அணியாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க:IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சிய சாதனையுடன் அடியெடுத்து வைத்து – அறிமுகமாகிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அந்தளவுக்கு பேட்டிங்கை விட பந்து வீச்சில் மிரட்டிய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சுப்பிரமணியன் 4 விக்கெட்டுகளும் கேப்டன் சாருக்கான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். மறுபுறம் மாபெரும் ஃபைனலில் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் ஆதரவு இருந்தும் அழுத்தத்தில் சொதப்பிய நெல்லை கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

Advertisement