வீடியோ : சுழலில் மேஜிக் நிகழ்த்திய ஜடேஜா, மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தல தோனி – ஹைதெராபாத்தை மடக்கிய சிஎஸ்கே

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் களமிறங்கிய நிலையில் தமிழக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட முயற்சித்த ஹரி ப்ரூக் 3 பவுண்டரியுடன் 18 (13) ரன்களில் ஆகாஷ் சிங் வேகத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியுடன் கைகோர்த்து அதிரடியாக விளையாட முயற்சித்து மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 (26) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த போது ரவீந்திர ஜடேஜா சுழலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சுழலில் மேஜிக்:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட ராகுல் திரிபாதியும் 21 (21) ரன்களில் ஜடேஜாவிடம் அவுட்டானார். அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த ஹைதராபாத் அணிக்கு நங்கூரமாக விளையாட முயன்ற கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 (12) ரன்களில் தீக்சனா சுழலில் எம்எஸ் தோனியின் அபாரமான மின்னல் வேக கேட்ச்சால் அவுட்டானார். அந்த நிலைமையில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட மயங் அகர்வாலும் அடுத்த ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் இறங்கி அடிக்க முயற்சித்து தோனியின் மின்னல் வேக ஸ்டம்ப்பிங்கில் 2 (4) ரன்களில் நடையை கட்டினார்.

குறிப்பாக அதற்கு முந்தைய சில பந்துகளில் மயங் அகர்வால் நேராக அடித்த பந்து தம்மை நோக்கி வந்த போதிலும் குறுக்கே ஹென்றிச் க்ளாசின் வந்ததால் பிடிக்க தவறிய ரவீந்திர ஜடேஜா கோபமடைந்தார். அதனால் அவர்களுக்கிடையே சில வார்த்தைகள் சண்டையாக வந்தாலும் அடுத்த சில பந்துகளிலேயே தனது மேஜிக் சுழலால் மயங் அகர்வாலை அவுட்டாக்கிய ஜடேஜா தன்னைத் தரமான வீரர் என்பதை நிரூபித்தார். அதனால் 95/5 என தடுமாறிய ஹைதராபாத் 150 ரன்கள் தாண்டுமா என்று கருதப்பட்ட போது நிதானமாக விளையாட முயன்ற ஹென்றிச் க்ளாசினும் 17 (16) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார்.

- Advertisement -

இறுதியில் மார்கோ யான்சேன் 17* (22) ரன்கள் எடுதத நிலையில் வாஷிங்டன் சுந்தரை மீண்டும் தோனி கடைசி பந்தில் 9 (6) ரன்களில் ரன் அவுட்டாக்கினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் 134/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தியுள்ளார்.

முன்னதாக இப்போட்டியில் ஓரளவு சுழலுக்கு சாதகமாக இருந்த சேப்பாக்கம் பிட்ச்சில் ஹைதராபாத் நல்ல துவக்கத்தை பெற்றாலும் 7 – 15 வரையிலான மிடில் ஓவர்களில் அற்புதமாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் தீக்சனா ஆகியோர் ஒரு பவுண்டரியை கூட கொடுக்காமல் துல்லியமாக பந்து வீசி மடக்கி பிடித்தனர்.

இதையும் படிங்க:ஐ.பி.எல் தொடரில் மாபெரும் இமாலய சாதனையை நிகழ்த்திய விராட் கோலி – இதெல்லாம் உண்மையிலே வேறலெவல் தான்

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் முக்கிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் விக்கெட்டை இழந்து பெரிய ரன்களை எடுக்க தவறினர். எனவே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் சென்னை பேட்ஸ்மேன்களும் நிதானமாக செயல்பட்டு வெற்றியை பதிவு செய்ய போராடி வருகிறார்கள்.

Advertisement