வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்தியா சார்பில் இசான் கிசான் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கினர். அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது.
குறிப்பாக தக்நரேன் சந்தர்பால் 20, கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 12 என தொடக்க வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய சவாலை கொடுத்த அறிமுக இளம் வீரர் அலிக் அதனேஸை 47 ரன்களில் அவுட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாதி கதையை முடித்து அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதே போல ப்ளாக்வுட் 14, ஜோஸ்வா டா சில்வா 2 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவும் மொத்தமாக 3 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டுவதற்கு உதவினார்.
சிராஜின் அபாரமான கேட்ச்:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் பவுண்டரியுடன் தன்னுடைய கேரியரை துவக்கி நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 40* ரன்கள் எடுக்க கேப்டன் ரோகித் சர்மா தனது பங்கிற்கு 30* ரன்கள் எடுத்தார். அதனால் முதல் நாள் முடிவில் 80/0 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் தொடக்க வீரர்கள் அவுட்டானதும் நங்கூரமாக விளையாட முயற்சித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ளாக்வுட் 28வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவின் கடைசி பந்தை நேராக அதிரடியான பவுண்டரியாக பறக்க விட்டார்.
அதை மிட் ஆஃப் திசையில் நின்று கொண்டிருந்த முகமது சிராஜ் சரியாக கவனித்து ஓடி கச்சிதமான நேரத்தில் தாவி அபாரமான கேட்ச் பிடித்து கீழே விழுந்தார். குறிப்பாக பந்தை முழுமையாக பிடித்து கீழே விழுந்த போதிலும் அதை கட்டுப்பாட்டில் வைத்து சிராஜ் அதற்கு கீழே தன்னுடைய கைகளையும் வைத்திருந்து தரையில் படாமல் பார்த்துக்கொண்டார். அந்த வகையில் மிகச் சிறப்பான கேட்ச் பிடித்ததால் பிளாக்வுட் ஏமாற்றத்துடன் சென்றார். மறுபுறம் நேராக இல்லாமல் குறுக்கான கோணத்தில் ஓடி சென்றதால் டைவ் அடித்துப் பிடிக்கும் வாய்ப்பை இழந்த சிராஜ் காயமடைவோம் என்பதைப் பற்றி கவலைப்படாமல் பந்தில் மட்டும் கவனத்தை செலுத்தி சிறப்பான கேட்ச் பிடித்தார்.
அதன் காரணமாக எதிர்பார்த்தது போலவே தன்னுடைய பந்து வீசும் கையின் முழங்கையில் நல்ல அடி வாங்கி லேசான காயத்தை சந்தித்த அவர் வயிற்று பகுதியிலும் அடி வாங்கியதால் விக்கெட்டை கொண்டாடாமல் வலியால் துடித்தார். இருப்பினும் பெரிய அளவில் காயம் ஏற்படாததால் சில வினாடிகளில் எழுந்த அவர் விக்கெட்டை கொண்டாடி தொடர்ந்து விளையாடி 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.
அப்படி காயத்தை பொருட்படுத்தாமல் பிடித்த இது போன்ற கேட்ச்கள் தான் வெற்றியை உங்கள் பக்கம் மாற்றக்கூடிய சக்தியை கொண்டது என இப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் அவரை பாராட்டியது பின்வருமாறு.
இதையும் படிங்க:IND vs WI : அவரு டேலண்ட்டை நான் பாத்திருக்கேன். கண்டிப்பா பெரிய ஆளா வருவாரு – இளம்வீரரை ஆதரித்த அஷ்வின்
“இது அற்புதமான கேட்ச். இது தான் மேட்ச் வின்னிங் கேட்ச். இந்த வகையான கேட்சுகள் தான் போட்டியை தலைகீழாக மாற்றக்கூடியது. அதே சமயம் அவர் காயத்தை சந்திக்காமல் அங்கே நன்றாக இருக்கிறார் என்று நம்புவோம்” என பாராட்டினார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது நாளில் 300 – 400 ரன்களை எடுத்து இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு இந்தியா முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.