
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்தொடரில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்ட போதிலும் ரஞ்சிக்கோப்பையில் அசாத்தி வரும் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதே போல் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைகளில் தோல்வியை சந்தித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றியை பதிவு செய்ய தவறிய ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியது. அத்துடன் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு பதில் முழுவதுமாக இளம் அணியை தேர்வு செய்திருக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள இந்திய அணியினர் முதலில் கடற்கரை வாலிபால் விளையாடி புத்துணர்ச்சியடைந்தனர்.
சிராஜ் அன்பு:
அதைத்தொடர்ந்து பார்படாஸ் நகருக்கு சென்றடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் அவர்களை சந்தித்து ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றனர். அதை தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினருக்கு உள்ளூரை சேர்ந்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்து வீசுவது, ஃபீல்டிங் செய்வது போன்ற வழக்கமான உதவிகளை செய்தனர். அதன் முடிவில் மிகவும் உதவிகரமாக இருந்த இளம் வீரரை சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு பேட் மற்றும் காலனி ஜோடிகளை தாமாக சென்று பரிசாக கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது 1975, 1979 ஆகிய வருடங்களில் அடுத்தடுத்த சாம்பியன் பட்டங்களை வென்று ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதன் உச்சகட்டமாக ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவை அனைத்திற்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் தவிப்பதே தரமான இளம் வீரர்கள் உருவாவதற்கு தடையாக இருக்கிறது.
சொல்லப்போனால் 2022இல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது “உங்களிடம் பணம் கேட்கவில்லை. மாறாக எங்களுடைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி முன்னேறுவதற்காக பேட், பந்து போன்ற உபகரணங்களை வாங்கிக் கொடுக்க முடியுமா” என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வின்சென்ட் பெஞ்சமின் அவர்கள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு உருக்கமான கோரிக்கையை வைத்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைக்கும் வகையில் அமைந்தது.
ஏனெனில் அது போன்ற அடிப்படை உபகரணங்கள் வாங்க முடியாமல் நிறைய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்மால் முடிந்த ஒரு இளம் வீரருக்கு சிறிய உதவியை செய்த சிராஜ் மனம் கடவுளுக்கு நிகரானது என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த சில தினங்களாக எங்களுக்கு உதவிய அந்த இளம் வீரர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்று சிராஜ் கூறியது அவருடைய நல்ல மனதை காட்டும் வகையில் அமைந்தது.
இதையும் படிங்க:இனிமேல் தோனி உட்பட யாருக்கும் பர்த்டே விஷ் பண்ண மாட்டேன் – அஸ்வின் அதிரடி கருத்து, காரணம் என்ன?
அதை தொடர்ந்து அந்த இளம் வீரர்களை தங்களுடைய பெவிலியனுக்கு இந்திய அணியினர் அழைத்து அன்பை வெளிப்படுத்தினர். மேலும் இசான் கிசான், ரகானே, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களிடம் அவர்கள் தேவையான ஆலோசனைகளை பெற்று செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். குறிப்பாக அஸ்வின் ஒரு இளம் ஸ்பின்னரை அருகே அமர வைத்து சில முக்கிய ஆலோசனைகளை கொடுத்தது பயனுள்ளதாக இருந்ததாக அந்த இளம் வீரர்கள் தெரிவித்தனர்.