- Advertisement -
கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil

லெஜெண்ட்ஸ் தொடரில் வெடித்த சண்டை : யூசுப் பதானை தள்ளிய ஆஸி வீரர் – ரசிகர்கள் கோபம், வீடியோ உள்ளே

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் போன்ற ஜாம்பவான்களின் தலைமையில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா கிங்ஸ் மற்றும் கெளதம் கம்பீர் தலைமையிலான இந்திய கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றில் பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்து நாக் – அவுட் சுற்றிலும் வென்று அக்டோபர் 5-ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் பில்வாரா கிங்ஸ் மற்றும் இந்திய கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோத்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பில்வாரா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 226/5 ரன்கள் சேர்த்தது. வில்லியம் போர்ட்டர்பீல்ட் 59 (37) ஷேன் வாட்சன் 65 (39) யூசுப் பதான் 48 (24) ராஜேஷ் பிஷ்னோய் 36* (11) என அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான அதிரடி ரன்களைக் குவித்தனர். இந்திய கேபிட்டல்ஸ் சார்பில் அதிக பட்சமாக மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வெடித்த சண்டை:
அதன் பின் 227 ரன்களை துரத்திய இந்திய கேபிடல்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் 1, ட்வயன் ஸ்மித் 24, மசகட்சா 10 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர் அதிரடியாக 9 பவுண்டரி 5 சிக்சருடன் 84 (39) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஆஷ்லே நர்ஸ் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிரடியாக 60* (28) ரன்களும் லியாம் பிளன்கட் 20* (9) ரன்களும் விளாசி 19.3 ஓவரில் 231/6 ரன்களை எடுக்க வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து பைனல் அழைத்துச் சென்றனர்.

அப்படி ரசிகர்களை மகிழ்வித்த அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய முன்னாள் வீரர் யூசுப் பதான் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் வழக்கம் போல ஸ்லெட்ஜிங் செய்து வம்பிழுத்தார். அதற்கு அசராத யூசுப் பதான் பதிலடி கொடுக்க சென்றதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சண்டையை பெரிதாக விடக்கூடாது என்ற எண்ணத்துடன் நடுவர்களும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் உள்ளே புகுந்து இருவரையும் தடுக்க முயற்சித்தனர்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் மிகவும் அருகே அருகே சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வாயால் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த யூசுப் பதானின் நெஞ்சின் மீது கை வைத்த மிட்செல் ஜான்சன் கீழே தள்ளி விட முயற்சித்தார். அதனால் மேலும் கோபமடைந்தாலும் கடைசி வரை வரம்பு மீறாத யூசுப் பதான் இடையிலேயே நடுவர்கள் இருந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாயில் மட்டுமே பேசினார். இறுதியில் ஜான்சனை அவரது அணி வீரர்கள் இழுத்துச் சென்றதால் அந்த கைகலப்பு அத்துடன் முடிந்தது.

ஆனால் வாய் பேச்சாக இருந்தாலும் மேலே கை வைத்த மிட்செல் ஜான்சனை இந்திய ரசிகர்களும் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மேலும் 2014ஆம் ஆண்டே உங்களது சொந்த மண்ணில் எங்களுடைய விராட் கோலி கொடுத்த பதிலடிகள் மறந்து போய்விட்டதா என்றும் ரசிகர்கள் அவரை சாடுகின்றனர். அதனால் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் இது தொடர்பாக ஸ்கை247 நெட் நிர்வாகம் நடத்திய விசாரணையில் ஜான்சன் மீது தவறு இருந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க : டி20 உ.கோ வெ.இ அணியிலுருந்து கடைசி நேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட ஹெட்மயர் – காரணத்தை கேட்டு சிரிக்கும் ரசிகர்கள்

அதனால் இந்த லெஜன்ட்ஸ் தொடரின் கமிஷனராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி மிட்சேல் ஜான்சனுக்கு அந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாகவும் அதிகாரபூர்வமான எச்சரிக்கையும் கொடுத்தார். மேலும் எஞ்சிய தொடரில் இது போல் நடந்து கொண்டால் அதிரடியாக தடை செய்யப்பட்டு நாடு அனுப்பப்படுவீர்கள் என்றும் ரவி சாஸ்திரி அவரை கடுமையாக எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -