டி20 உ.கோ வெ.இ அணியிலுருந்து கடைசி நேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட ஹெட்மயர் – காரணத்தை கேட்டு சிரிக்கும் ரசிகர்கள்

Hetmyer
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு முன்னோடியாக டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் வரலாற்றில் 8வது முறையாக இம்முறை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி உட்பட ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் பைனல் உட்பட மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. இத்தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் பங்கேற்பதற்காக ஏற்கனவே அந்தந்த நாடுகள் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்த நிலையில் ஒருசில அணிகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சிகளை துவங்கியுள்ளன. முன்னதாக 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 2 டி20 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் தொடர் தோல்விகளை சந்தித்து தரவரிசையில் பின்தங்கியது. அதன் காரணமாக இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியாத அந்த அணி முதலாவதாக நடைபெறும் தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து போன்ற அணிகளுடன் மோதி அதில் வென்றால் மட்டுமே முதன்மை சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சிரிக்கும் ரசிகர்கள்:
அந்த நிலையில் கைரன் பொல்லார்ட் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில் நாட்டுக்காக விளையாடாமல் பணத்துக்காக முன்னுரிமை கொடுக்கும் அன்றே ரசல், சுனில் நரேன் ஆகியோர் இல்லாமல் நிக்கோலஸ் பூரன் தலைமையில் 15 பேர் கொண்ட உலககோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அதற்கு முன்பாகவே அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியினர் கடந்த சனிக்கிழமை அன்றே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தை நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மையர் கேட்டுக் கொண்டதால் அவருக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட்டது. அத்துடன் அக்டோபர் 3ஆம் தேதியன்று அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு மறு ஏற்பாட்டையும் அந்நாட்டு வாரியம் செய்திருந்தது. ஆனால் அந்த விமானத்திற்கு திட்டமிட்டபடி சிம்ரோன் ஹெட்மையர் வராததால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மீண்டும் ஒரு முறை டிக்கெட் போட்டு செலவு செய்ய விரும்பாத காரணத்தால் அவரை டி20 உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் கடைசி நேரத்தில் தம்மால் விமான நிலையத்திற்கு வரமுடியவில்லை என்று நேரடியாக தெரிவித்ததால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் சமர் ப்ரூக்ஸ் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப் படுவதாகவும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து ஹெட்மையருக்காக புக் செய்யல்பட்ட டிக்கெட்டில் அவர் பயணித்து விரைவில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது அணியுடன் இணைந்து கொள்வார் என்றும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் கூறியுள்ளது.

இப்படி கடைசி நேரத்தில் காலை வாரும் வகையில் ஹெட்மையர் நடந்து கொண்டது எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தங்களது அணியின் பயிற்சிகளை மேற்கொண்டும் தாமதிக்க விரும்பாத காரணத்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மறுபுறம் சமீபத்திய கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் குவாலிபயர் போட்டியில் விளாசிய 109* ரன்களையும் சேர்த்து மொத்தம் 241 ரன்களைக் குவித்து நல்ல பார்மில் இருப்பதால் கடைசி நேரத்தில் ப்ரூக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் ஏற்கனவே தரமான வீரர்கள் இல்லாமல் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய வீரரான சிம்ரோன் ஹெட்மையர் கடைசி நேரத்தில் இப்படி வேடிக்கையான காரணத்தால் விலகியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி சிரிக்க வைக்கிறது. குறிப்பாக “இது என்ன சிம்ரன்” என்று முன்னாள் தமிழக வீரர் அபினவ் முகுந்த் இந்த செய்தியை பார்த்து கலகலப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement