அமெரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டடத்தை கட்டியுள்ளது. ஜூலை 14ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சீட்டல் ஆர்க்கஸ் அணி 2வது இடம் பிடித்த டெக்சாஸ் அணியை தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு சென்றது. மறுபுறம் 3வது இடம் பிடித்த வாஷிங்டன் அணியை எலிமினேட்டரில் எம்ஐ அணி தோற்கடித்தது.
அந்த நிலையில் ஜூலை 29ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று பரம எதிரிகளாக திகழும் சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெக்ஸாஸ் 20 ஓவர்களில் போராடி வெறும் 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
பொல்லார்ட் பதிலடி:
கேப்டன் டு பிளேஸிஸ் 6, சாட்னர் 6, கோடி செட்டி 14, டேவிட் மில்லர் 17, டேனியல் சாம்ஸ் 8 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மிலிந்த் குமார் 37 ரன்களும் டேவோன் கான்வே 38 ரன்களும் எடுத்த நிலையில் எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 159 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு ஜஹாங்கீர் 36 (18), கேப்டன் நிக்கோலஸ் பூரான் 23 (20), தேவால்ட் ப்ரேவிஸ் 41* (33) டிம் டேவிட் 33 (20) டேவிட் வீஸ் 19* (11) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து 19 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
அதனால் ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் சீட்டல் அணியை எதிர்கொள்ள எம்ஐ நியூயார்க் தகுதி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய டெக்ஸாஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது. குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் சந்தித்த 2 போட்டிகளிலும் மும்பையை தோற்கடித்த சென்னை ஃபைனல் சென்று கோப்பையை வென்றது. அந்த நிலையில் இதே தொடரின் லீக் சுற்றில் சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் அணியிடம் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ வீழ்ந்தது.
ஆனால் அவை அனைத்திற்கும் பதிலடியாக இந்த போட்டியில் டெக்சாஸ் அணியை தோற்கடித்த எம்ஐ வீட்டுக்கு அனுப்பி வைத்தது மும்பை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக 16 வருட ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய அனல் பறந்த மறக்க முடியாத தருணங்களில் 2012 சீசனில் எலிமினேட்டரில் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்த பிராவோ விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கலாய்த்து பதிலடி கொடுத்ததை மறக்க முடியாது.
அதை மறக்காமல் வைத்திருந்த பொல்லார்ட் இந்த போட்டியின் முடிவில் தம்மை காண்பதற்காக வந்த பிராவோவை ஒன்றுக்கு 2 முறை அதே போல விமானத்தில் ஏறி வீட்டுக்குச் செல்லுங்கள் என்று சிரித்துக் கொண்டே கலாய்த்து மாஸ் பதிலடி கொடுத்தார். அதற்கு “காலில் விழுகிறேன் கலாய்ப்பதை நிறுத்து” என்ற வகையில் பிராவோ ரியாக்சன் கொடுத்தது அவர்களிடையே இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. ஏனெனில் 2021 ஐபிஎல் தொடரில் சென்னையை தோற்கடித்த போது ப்ராவோ மண்டையில் பொல்லார்ட் முத்தமிட்டு பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் மிஸ்ஸே ஆகாது, ஐபிஎல் தோல்விக்கு சென்னையின் சூப்பர் கிங்ஸை பழிதீர்த்த மும்பையின் எம்ஐ – ஃபைனல் சென்றது எப்படி?
மேலும் தற்போது மும்பைக்கு நிகராக சென்னையும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்ததை கடந்த மாதம் ப்ராவோ தம்முடைய காருக்குள் உட்கார வைத்து பொல்லார்ட்டை கலாய்த்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வகையில் அப்போது முதல் இப்போது வரை அந்த இருவரும் நண்பர்களாக மோதி வருவது குறிப்பிடத்தக்கது.