6, 6, 6, 6.. 19 வயது பச்சிளம் ஸ்பின்னரை பாவம் பாராமல் – முரட்டுத்தனமாக 4 100மீ சிக்சர்களாக அடித்து நொறுக்கிய பொல்லார்ட்

Kieron Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற 12வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 178/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு எவின் லெவிஸ் 10, ஆண்ட்ரூ பிளட்சர் 32, ஜோஸ்வா டா சில்வா 18, கூலி 11 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

ஆனாலும் கடைசி நேரத்தில் வந்து அடித்து நொறுக்கிய கேப்டன் ஷேர்பான் ரூத்தார்போர்ட் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62* (38) ரன்களும் போஸ்க் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 30 (21) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நைட் ரைடர்ஸ் சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய நைட் ரைடர்ஸ் அணிக்கு வால்டன் 6, மார்ட்டின் கப்டில் 7 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

முரட்டுத்தனமான பொல்லார்ட்:
இருப்பினும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் தற்சமயத்தில் இருக்கும் நல்ல ஃபார்மை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61 (32) ரன்கள் விளாசி சரிவை சரி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் சற்று நிதானமாக விளையாடிய லார்க்ன் டுக்கர் 36 (31) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த ஜோடியை விட அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் மற்றும் ரசல் ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டது போலவே காட்டுத்தனமாக அடித்து வேகமாக ரன்களை சேர்த்தனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த வெறும் 19 வயது இளம் சுழல் பந்து வீச்சாளர் இசாருல்லா நவீத் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தில் மிட் விக்கெட் திசையில் தன்னுடைய முழு பவரை கொடுத்து மெகா சிக்சரை பறக்க விட்ட அவர் 3வது பந்திலும் 4வது பந்திலும் அதே திசையில் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அத்துடன் நிற்காமல் மீண்டும் 5வது பந்தில் அதே போல வீசிய அந்த 19 வயது இளம் பவுலருக்கு கருணை காட்டாமல் காட்டு தனமாக அடித்த அவர் மீண்டும் சிக்ஸர் அடித்து போட்டியை மொத்தமாக மாற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க: உலகக்கோப்பை 2023 : 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்த – பியூஷ் சாவ்லா

ஆச்சரியப்படும் வகையில் அந்த 4 அடுத்தடுத்த சிக்சர்களுமே 100 மீட்டருக்கு மேல் செல்லும் அளவுக்கு பொல்லார்ட் காட்டுத்தனமாக அடித்தார் என்றே சொல்லலாம். அப்படி வெறித்தனமாக அடித்த அவர் 5 சிக்ஸருடன் 37* (16) ரன்கள் எடுக்க மறுபுறம் தன்னுடைய முரட்டுத்தனத்தை காட்டிய ரசல் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 23* (8) ரன்களை விளாசினார். அதனால் 17.1 ஓவரிலேயே அசால்ட்டாக 180/4 ரன்கள் எடுத்த ட்ரிபாங்கோ 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றதால் செயின்ட் கிட்ஸ் சார்பில் அதிகபட்சமாக போஸ்க் 3 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement