முதல் ஓவரிலேயே 2 விக்கெட், 327 நாட்கள் கழித்து மாஸ் கம்பேக் கொடுத்த பும்ரா – திணறிப்போன அயர்லாந்து

Jasprit Bumrah 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அயர்லாந்து சென்றுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் முழுவதுமாக இளம் வீரர்களுடன் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து கேப்டனாக வழி நடத்துவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இத்தொடரின் முதல் போட்டி டப்லின் நகரில் துவங்கியது.

அதில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பவுலர் என்ற சாதனையைப் படைத்த பும்ரா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடினார். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய அயர்லாந்துக்கு முதல் பந்திலேயே பவுண்டரியை அடித்த நட்சத்திர வீரர் ஆண்டி பால்பரினை 2வது பந்தில் கிளீன் போல்ட்டாக்கிய பும்ரா 327 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அந்த நிலைமையில் வந்த லார்கன் டுக்கெர் வித்தியாசமாக அடிக்கிறேன் என்ற பெயரில் 5வது பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார். அப்படி முதல் ஓவேரிலேயே 2 விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா தன் மீதான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு பதிலடியுடன் மாஸ் கம்பேக் கொடுத்தார். அதனால் 4/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய அயர்லாந்தை மீட்டெடுக்க போராடிய ஹேரி டெக்டர் 9 (16) ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் பால் ஸ்டிர்லிங்க்கும் 11 (11) ரன்களில் ரவி பிஷ்னோய் சுழலில் பெவிலியன் திரும்பினார்.

போதாகுறைக்கு அடுத்ததாக வந்த ஜார்ஜ் டாக்ரல் 1, மார்க் அடைர் 16 என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 59/6 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற அயர்லாந்து 100 ரன்களைத் தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த சமயத்தில் நங்கூரமாக விளையாடிய மற்றொரு நட்சத்திர வீரர் குர்ட்டிஸ் கேம்பர் 39 (33) ரன்கள் எடுத்ததால் தப்பிய அயர்லாந்து 100 ரன்கள் கடந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:IND vs IRE : முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான 2 இளம் வீரர்கள் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய மெக்கார்த்தி நேரம் செல்ல செல்ல சற்று அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்டு அரை சதமடித்து 51* (33) ரன்கள் விளாசினார். அதனால் ஓரளவு தப்பிய அயர்லாந்து 20 ஓவர்களில் 139/7 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் கம்பேக் நாயகன் கேப்டன் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 140 என்ற வெற்றி இலக்கை இந்தியா துரத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement