வீடியோ : அநாகரிகமற்ற இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித் – வார்னரை கேவலமான சொற்களால் திட்டி கிண்டல், அவர்களின் ரியாக்சன் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே தைரியமாக அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 118* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 141 ரன்களும் அலெக்ஸ் கேரி 66 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து நிதானத்தை வெளிப்படுத்தாமல் அதிரடியாகவே விளையாடி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூக் தலா 46 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அநாகரீகமான ரசிகர்கள்:
அதை தொடர்ந்து 281 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, லபுஸ்ஷேன் 13, ஸ்மித் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலைமையில் உஸ்மான் கவாஜா 34 ரன்கள் எடுத்து சவாலை கொடுப்பதால் 4வது நாள் முடிவில் 107/3 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாளில் அந்த அணிக்கு 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் இங்கிலாந்துக்கு 7 விக்கெட் தேவைப்படுவதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஓலி ராபின்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பவுண்டரி எல்லை அருகே நின்று ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஃபீல்டிங் செய்தார்.

அப்போது “நீங்கள் செய்தியில் அழுவதை நாங்கள் பார்த்தோம்” என்று 5 கிலோமீட்டர் தூரம் கேட்கும் அளவுக்கு பர்மிங்காம் மைதானத்தில் கூடியிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் வெளிப்படையாக கலாய்த்த நிலையில் ராபின்சன் சிரித்த். அதாவது 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய ஸ்மித் செய்தியாளர்களிடம் தவறு செய்து விட்டதாக அழுததை யாராலும் மறக்க முடியாது. அதற்காக ஒரு வருடம் தண்டனை பெற்ற ஸ்மித் அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் அந்த மோசமான நிகழ்வால் இன்னும் நிறைய கிண்டல்களை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

சொல்லப்போனால் தென்னாப்பிரிக்க ரசிகர்களை விட இங்கிலாந்து ரசிகர்கள் அதை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி அவரை கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த 2019 ஆஷஸ் தொடரில் இதை விட மோசமாக ஸ்மித் அழுவது போன்ற முகமூடிகளை தங்களுடைய முகத்தில் மாட்டிக் கொண்டு உப்பு காகிதங்களை கையில் வைத்து இங்கிலாந்து ரசிகர்கள் வெறித்தனமாக கலாய்த்தனர். ஆனால் தற்போது 4 வருடங்கள் கடந்தும் அதை மறக்காத இங்கிலாந்து ரசிகர்கள் அவ்வாறு ஒட்டுமொத்த மைதானமாக சேர்ந்து கிண்டலடித்தது ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருப்பினும் அதற்காக மனதுக்குள் கோபப்பட்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாத ஸ்மித் அமைதியாக சிரித்துக் கொண்டே அந்த நிலைமையை சமாளித்தார். அதே போல 2வது இன்னிங்ஸில் அவர் பேட்டிங்கில் அவுட்டாகி சென்ற போதும் ஏராளமான இங்கிலாந்து ரசிகர்கள் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறிந்து வெறித்தனமாக கொண்டாடினர். அதை விட உணவு இடைவேளையில் களமிறங்கிய டேவிட் வார்னரை மிகவும் மோசமான ஆங்கில கெட்ட வார்த்தையில் சில இங்கிலாந்து ரசிகர்கள் சத்தமாக திட்டினார்கள்.

இதையும் படிங்க:விராட் கோலியின் டயட் உணவுகளை முதன்முறையாக கேட்டதும் நானே ஆச்சரியப்பட்டேன் – ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்

பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற நிலையில் இந்த கிண்டல்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் அதற்காக கவலைப்படாத வார்னர் இன்னும் சத்தமாக கத்துங்கள் என்ற வகையில் அந்த ரசிகர்களிடம் ஜாலியாக ரியாக்சன் கொடுத்து சென்றார். மொத்தத்தில் இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது என்ற நிலைமையில் தண்டனை பெற்று மீண்டும் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களை இப்படி வெளிப்படையாக சேர்ந்து இங்கிலாந்து ரசிகர்கள் கலாய்த்தது அநாகரீகமாகவே இருந்தது என்றால் மிகையாகாது.

Advertisement