அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற அயர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் வென்ற பாகிஸ்தான் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி மே 14ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் போராடி 178/7 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லார்கன் டூக்கர் 73 (41), ஆண்டி பால்பரின் 35 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3, அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பாகிஸ்தான் வெற்றி:
அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு நட்சத்திர வீரர் முகமது ரஸ்மான் 56 (38) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக அரை சதமடித்து 75 (42) ரன்கள் குவித்தார். அதனால் 17 ஓவரிலேயே 181/4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அந்த வகையில் முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் தங்களுடைய பலத்தை காண்பித்த பாகிஸ்தான் 2 – 1 (3) என்ற கணக்கில் அயர்லாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக இப்போட்டியில் அடித்த 75 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் 3 சதங்கள் 36 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக (39) முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவுக்காக விராட் கோலி 1 சதம் 37 அரை சதம் உட்பட 38 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: இந்த தொடர் முழுக்க நாங்க தோக்க காரணம் இதுதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட – லக்னோ கேப்டன் கே.எல் ராகுல்
மேலும் இந்த போட்டியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சேர்ந்து 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். இந்த 139 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000+ பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த முதல் ஜோடி என்ற உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அயர்லாந்தின் ஆண்டி பால்பரின் – பால் ஸ்டிர்லிங் ஆகியோர் 2043 ரன்கள் அடித்து 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.