தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 13ஆம் தேதியான நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 217/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் தொடக்க வீரர் ரஞ்சன் பிரதோஷ் பால் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 88 (55) ரன்கள் எடுத்தார்.
அவருடன் நாராயன் ஜெகதீசன் 35 (27) ரன்களும் சஞ்சய் யாதவ் 31* (12) ரன்களும் எடுக்க சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 218 என்ற பெரிய இலக்கை துரத்திய சேலத்தின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே நேர்த்தியாக பந்து வீசிய சேப்பாக் பவுலர்களுக்கு எதிராக அதிரடி காட்ட முடியாமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்களில் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக ஆகாஷ் சும்ரா 24 (27) ரன்களும் கௌஷிக் காந்தி 23 (20) ரன்களும் எடுக்க சேப்பாக் சார்பில் அதிகபட்சமாக பாபா அபரஜித் மற்றும் ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
ஒரே பந்தில் 18 ரன்கள்:
இந்த பெரிய வெற்றிக்கு 88 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய பிரதோஷ் பால் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணிக்கு கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சய் யாதவ் அதிரடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் 20வது ஓவரை வீசிய அபிஷேக் டன்வர் கடைசி பந்தில் அவரை 17 (8) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். ஆனால் அது நோபால் என்று நடுவர் அறிவித்ததால் மீண்டும் அவர் வீசிய ஃப்ரீ ஹிட் ஃபுல் டாஸ் பந்தை சஞ்சய் யாதவ் சிக்ஸராக தெறிக்க விட்டார்.
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
சரி இதுவும் ஒரு பாடம் என்று அபிஷேக் தன்வர் நினைத்துக் கொண்டிருக்கும் போது நடுவர் மீண்டும் அந்த பந்தை நோபால் என்று அறிவித்தார். ஏனெனில் முந்தைய பந்தில் பாடத்தை கற்காத அவர் வெள்ளைக்கோட்டை தாண்டி பந்து வீசியதால் மீண்டும் திரும்ப வீசினார். இருப்பினும் அந்த பந்தை சற்று சிறப்பாக வீசியதால் சஞ்சய் யாதவ் நேராக அடித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதே பந்தை மீண்டும் வெள்ளைக்கோட்டை தாண்டி வீசியதால் நடுவர் மீண்டும் நோ-பால் என அறிவித்து ஃபிரீ ஹிட் வழங்கினார்.
அதன் காரணமாக ரொம்பவே பதற்றமடைந்த அபிஷேக் அடுத்ததாக ஒய்ட் பந்தாக வீசியதால் மீண்டும் கடைசி பந்தை வீசினார். இறுதியில் யார்கர் லென்த்தை தவற விட்டு அவர் வீசிய பந்தை மீண்டும் சஞ்சய் யாதவ் சிக்ஸராக பறக்க விட்டு சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் கடைசி ஓவரில் 1, 4, 0, 1, நோபால், 1 என ஏற்கனவே முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் கொடுத்திருந்த அவர் கடைசி ஒரே ஒரு பந்தில் மட்டும் நோபால், 6 நோபால், 2 நோபால், ஒய்ட், 6 என 18 ரன்களை வாரி வழங்கி மொத்தமாக 26 ரன்களை கொடுத்தார்.
வரலாற்றில் இதற்கு முன் நிறைய பவுலர்கள் ஒரே ஓவரில் நிறைய ரன்கள் வாரி வழங்கிய போதிலும் இவர் மட்டும் ஒரே ஒரு பந்தில் ஹாட்ரிக் நோபால்களை வீசி 18 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. இதற்கு முன் 2013/14 பிக் பேஷ் தொடரில் கிளின்ட் மெக்கேவுக்கு எதிராக ட்ராவிஸ் பிரிட் 20 ரன்களுக்கு 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ராணாவுக்கு எதிராக இந்திய வீரர் விரேந்திர சேவாக் ஒரே பந்தில் 17 ரன்கள் அடித்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்தியா மட்டுமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டே ஒரு மகத்தான கேப்டனை இழந்துவிட்டது – இயான் மோர்கன் கருத்து
அந்த வகையில் வரலாற்றிலேயே ஒரு பந்தில் அதிக ரன்களை கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை அபிஷேக் டன்வர் படைத்துள்ளார். மேலும் அந்த தருணம் போட்டியில் சேலத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி தோல்விக்கும் காரணமாக அமைந்தது.



