டிஎன்பிஎல்: 83 ரன்ஸ்.. எலிமினேட்டரில் ஆல் ரவுண்டராக அஸ்வின் மிரட்டல்.. திருச்சியை வெளியேற்றிய திண்டுக்கல்

R Ashwin
- Advertisement -

தமிழ்நாடு பிரிமியர் லீக் 2025 டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை இரண்டாம் தேதி திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. தோற்றால் வெளியேற வேண்டும் என்ற நிலையைக் கொண்ட அப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் இடங்களைப் பிடித்த நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி சோழாஸ் அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய திருச்சிக்கு துவக்க வீரர்கள் வாசிம் அகமது 36, கேப்டன் சுரேஷ்குமார் 23 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் அடுத்ததாக வந்த கௌஷிக் 9, சஞ்சய் யாதவ் 1 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் பெவிலியின் திரும்பினர்.

- Advertisement -

ஆல் ரவுண்டராக அஸ்வின்:

அதே போல மிடில் ஆர்டரில் ராஜ்குமார் 0, செல்வகுமரன் 0 ரண்களில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் விக்கெட்டை இழந்தனர். நங்கூரமாக விளையாடிய முகிலேஷ் 12 ரன்னில் பெரியசாமி வேகத்தில் போல்டானார். அதிரடிக் காட்ட முயற்சித்த ஜாபர் ஜமால் 33 (20) ரன்னில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். இறுதியில் அதிசயராஜ் டேவிட்சன் 7* (2) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் திருச்சி 140/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திண்டுக்கல் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 பெரியசாமி 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக 141 ரன்களை துரத்திய திண்டுக்கல் ஓப்பனிங்கில் களமிறங்கிய அஸ்வின் அட்டகாசமாக விளையாடினர். அவருடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சிவம் சிங் 16 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

திண்டுக்கல் வெற்றி:

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த அனுபவத்தைக் கொண்ட அஸ்வின் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து பேட்டிங் மாஸ்டர்கிளாஸை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். 2வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித்துடன் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 83 (48) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். மிடில் ஆடரில் விமல் குமார் 7, தினேஷ் 0 ரன்களில் அவுட்டானார்கள்

இதையும் படிங்க: 87 ரன்கள் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இருப்பினும் பாபா இந்திரஜித் 27* (29), ஹன்னி சைனி 4* (2) ரன்கள் எடுத்த உதவியுடன் 16.4 ஓவரிலேயே 143/4 ரன்களை எடுத்த திண்டுக்கல் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. திருச்சிக்கு அதிகபட்சமாக ஈஸ்வரன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் திருச்சியை இத்தொடரிலிருந்து நாக் அவுட் செய்த திண்டுக்கல் நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் சேப்பாக்கத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement