தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2025 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி சோழாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதையடுத்து நடைபெறும் பிளே ஆஃப் சுற்றில் ஜூலை ஒன்றாம் தேதி திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த துஷார் ரஹீஜா 28 (13) ரன்னில் அவுட்டானார்.
திருப்பூர் அபாரம்:
மறுபுறம் அதிரடியாக விளையாடிய அமித் சாத்விக் அரை சதத்தை அடித்து 57 (40) ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் முகமது அலி 2 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 33 (22) ரன்களை விளாசி அசத்தினார். அவரை விட சசிதேவ் மிரட்டலாக பேட்டிங் செய்து 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (26) ரன்கள் குவித்து அமர்க்களமாக விளையாடினார்.
இறுதியில் பிரதோஷ்பால் 16* (14) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் திருப்பூர் 202/5 ரன்களை குவித்து அசத்தியது. சேப்பாக்கம் அணிக்கு அதிகபட்சமாக லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய சேப்பாக்கம் அணியை அற்புதமாக பவுலிங் செய்த திருப்பூர் அதிரடியாக விளையாட முடியாமல் மடக்கிப் பிடித்தது. அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சேப்பாக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 16.1 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஃபைனலில் முதல் முறையாக:
அதிகபட்சமாக கேப்டன் பாபா அபாரஜித் 30 (13) ரன்கள் எடுத்த நிலையில் திருப்பூர் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 2, இசக்கிமுத்து 3, மதிவாணன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற திருப்பூர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாட முதல் அணியாக தகுதி பெற்றது. அத்துடன் 2016 முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சாய் கிஷோர் தலைமையில் திருப்பூர் அணி முதல் முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: நெருப்புடன் நெருப்பாக மோத குல்தீப் வேணும்.. அதுக்கு பயந்துகிட்டு பும்ராவை விடாதீங்க.. இயன் பெல் அறிவுரை
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி ஜூலை 4ஆம் தேதி சேப்பாக்கத்துடன் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட உள்ளது. அதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் திருப்பூருடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.



